பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள குல்பூஷன் ஜாதவை இன்று அவரது மனைவி, தாய் ஆகியோர் சந்தித்தனர்.
கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், பலூசிஸ்தான் மாகாணத்தில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறி, குல்பூஷன் ஜாதவ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவ கோர்டில் விசாரிக்கப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, ஐ.நா.,வின் சர்வதேச கோர்ட்டில் இந்திய அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனால் அவரது மரண தண்டனையை ஐ.நா., நிறுத்தி வைத்துள்ளது.
இதற்கிடையில் குல்பூஷன் ஜாதவின் மனைவி மற்றும் தாய் அவரை சந்திக்க வேண்டும் என தொடர்ந்து முயற்சித்தனர். இறுதியாக பாகிஸ்தான் அரசின் ஒப்புதலுடன் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாதவ், இன்று இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச்சக அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
ஜாதவின் மனைவி மற்றும் தாய் இந்திய தூதரகம் மூலம் இந்தியாவிற்கான துணை தூதர் ஜெ.பி.சிங் ஆகியோருடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் ஜாதவை சந்தித்தனர்.
ஜாதவும் அவரது குடும்பத்தினரும் சந்தித்தபோது, இடையே கண்ணாடி தடுப்பு வைக்கப்பட்டிருந்தது. முகத்தை பார்த்து போன் ஸ்பீக்கர் மூலம் அவர்கள் பேசிக்கொண்டனர்.