சபரிமலையில் இளம்பெண்கள் ஐயப்பனை தரிசிப்பதற்காக 2 நாட்கள் ஒதுக்கலாம் என உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் வழிபடுவதற்காக மட்டும் இரண்டு நாட்கள் ஒதுக்கத் தயார் என்று உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது...
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் 48 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்பது என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முடிவு செய்துள்ளது. மேலும் வருகிற ஜனவரி மாதம் 22 ஆம் தேதி முதல் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர். இதையடுத்து, இதையடுத்து சபரிமலைக்குச் செல்ல ஆன்லைன் மூலம் சில பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். பெண்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சபரிமலையில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
தங்களுக்கு சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய கேரள அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி 4 பெண்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணையில் பதில் மனு தாக்கல் செய்துள்ள கேரள அரசு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அனைத்து வயதினரையும் அனுமதிக்கும் முடிவில் மாற்றமில்லை என்றும், தொடர் போராட்டங்கள் காரணமாகவே இதுவரை பெண்கள் தரிசனம் செய்ய இயலவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இதனால் பெண்கள் வழிபடுவதற்காக மட்டும் 2 நாட்கள் ஒதுக்கத் தயாராக இருப்பதாக கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னர் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்ற போது இந்த திட்டத்திற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உளவுத்துறையினர் எச்சரிக்கையை அடுத்து அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க நிலக்கல் முதல் சன்னிதானம் வரை காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர், ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.