அம்பேத்காரை இழிவுபடுத்தியவர்களுக்கு மாயாவதி ஓட்டு சேகரிப்பதாக உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்!
பாபா சாஹேப் அம்பேத்கரை இழிவுபடுத்தியவர்களுடன் கூட்டணி என்றபெயரில் சேர்த்துக்கொண்டு அவர்களுக்காக ஓட்டு சேகரித்து வருகின்றார் மாயாவதி என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் கட்ட மக்களவை தேர்தலை எதிர்நோக்கி சென்றுக்கோண்டிருக்கும் வேலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தின் ஒருபகுதியாக இன்று மொராதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாட்டில் அரசியல் எவ்வளவு கேவலமாக போய்க்கொண்டிருக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும். பாபா சாஹேப் அம்பேத்கரை இழிவுபடுத்தியவர்களுக்காக மாயாவதி இன்று பிரச்சாரம் செய்து வருகின்றார். இந்தியாவுக்கு யார் மதிப்பு தரவில்லையோ அவர்கள் வாக்கு பெறுவதற்கும் தகுதியானவர்கள் இல்லை.
மெகா கூட்டணி என்ற பெயரில் இணைந்துள்ள இக்கட்சிகள் ராம்பூரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் ஆஸம் கானை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அது மட்டும் இன்றி பொதுக்கூட்டத்தில் அவர்களை ஆதரித்துப் பேசியுள்ளார். சமாஜ்வாதி கட்சியினர் அம்பேத்கரை இழிவுபடுத்தியதை மறந்துவிட்டனரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்கெனவே இங்கு ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சியோ, பகுஜன் சமாஜ் கட்சியோ நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி ஏழைகளுக்கு வீடுகட்டித் தரும் திட்டத்தையே கைவிட்டனர். அவர்கள் ஆட்சியில் விவசாயிகள் பெரும் பிரச்சினைகளை சந்தித்தனர். அவர்கள் பசியைப் போக்கவில்லை. கஜானாவில் இருந்த பணம் எல்லாம் ஊழலிலேயே கரைந்துபோனது.
ஆனால் மாநிலத்தில் பாஜக அரசு செய்துள்ள அனைத்துப் பணிகளுக்கும் சரியான கணக்குகள் உண்டு. வளர்ச்சித் திட்டங்களை மோடி அறிவிக்கும்போது எந்த வித ஜாதி மதங்களையும் பார்ப்பதில்லை. அதற்குக் காரணம் அவர் செய்யும் பணிகளின் நோக்கம் எல்லாம் ''அனைவருக்கும் வளர்ச்சி.. ஒவ்வொருக்குமான வளர்ச்சி'' என்பதுதான் என குறிப்பிட்டு பேசினார்.