சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க தமிழகத்தில் புதிய திட்டம்!

சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைப்பதற்காக தமிழகத்தில் மின்சார பஸ்கள் அறிமுகம்! 

Last Updated : Mar 29, 2018, 07:35 AM IST
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க தமிழகத்தில் புதிய திட்டம்! title=

சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைப்பதற்காக தமிழகத்தில் மின்சார பஸ்களை அறிமுகம் செய்யும் வகையில் போக்குவரத்து துறை மற்றும் இங்கிலாந்து முகமை இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இப்புதிய திட்டத்தை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது....! 

இங்கிலாந்து நாட்டின் சி40 (சிட்டீஸ் கிளைமேட் லீடர்ஷிப் குரூப்) என்ற முகமை, மின்சார பஸ்களை பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாத்தல், மாசுபாட்டினை குறைத்தல், பசுமைப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை உலகளாவிய அளவில் மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த மின்சார பேருந்து திட்டத்தை உலக அளவில் 26 நாடுகள் ஏற்றுக்கொண்டு 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் அர்ஜென்டினா நாட்டின் பியூனோஸ் ஏரெசில் நடைபெற்ற சி40 லத்தீன் அமெரிக்க மேயர்ஸ் மன்றத்தில் முதன் முதலாக அறிக்கை செய்து கையொப்பம் இடப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்பு பட்டியலில் கையெழுத்திட்டுள்ள அனைத்து நாடுகளும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையிலான தொழில்நுட்பங்களை பயன் படுத்த தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளன.

பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையிலும், சுற்றுப்புறச் சூழ்நிலைகளை பாதுகாக்கும் வகையிலும், காற்று மாசுபாட்டை வெகுவாக குறைக்கும் மின்சார பஸ் திட்டத்தை சி40 முகமையின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தும் வகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் போக்குவரத்து துறைக்கும், சி40 முகமைக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டினை குறைக்கும் மின்சார பஸ்களை கொள்முதல் செய்வதன் மூலம், புதிய தொழில்நுட்பங்களை புகுத்துதல், இதர வடிவிலான பஸ்களைவிட, மின்சார பஸ்களை குறைந்த விலையில் கொள்முதல் செய்தல் ஆகிய நன்மைகளை இந்த ஒப்பந்தம் கையொப்பமிடுவதன் மூலம் பெறமுடியும்.

மேலும், இவ்வகையான மின்சார பஸ் போக்குவரத்து செயல்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு, சாலை வரைபடம் தயாரித்தல், தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், தூய்மையான மின்சாரம் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறைக்கு சி40 முகமை தகுந்த உதவிகளை செய்யும்.

இந்த அறிவிப்பில் தமிழ்நாடு அரசு கையொப்பமிடுவதன் பயனாக, தமிழ்நாட்டில்மின்சார பஸ் இயக்கம் அறிமுகப்படுத்தப்படுவதோடு, அது தொடர்புடைய இதர தொழில்நுட்பங்களும் மேன்மை அடையும் என தெரிவித்திருந்தது. 

Trending News