மும்பையில் ஓடும் ரயிலில் "Kiki Challenge" செய்த இளைஞர்களுக்கு ரயில்வே நடைமேடையை சுத்தம் செய்ய ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல பாப் பாடகர் டார்க்கியின் 'In my feelings' என்னும் பாடல் தொடர்பான சவால்கள் இணைய பிரியர்களை தற்போது சுண்டி இழுத்துள்ளது. பாப் பாடகர் டார்க்கியின் Scorpion என்னும் இசை ஆல்பம் கடந்த மாதம் வெளியானது. இந்த இசை கோப்பில் இடம்பெற்றுள்ள 'In my feelings' என்னும் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து இந்த பாடலுக்கு தொடர்பாகும் வகையில் "Kiki Challenge" அல்லது "In my feelings challenge" என்னும் பெயரில் இணையத்தில் ரசிகர்கள் புது சவால் ஒன்றினை அறிமுகம் செய்தனர். அதாவது... இந்த பாடலினை வாகனத்தில் ஒலிக்க வைத்துவிட்டு வாகனத்தை விட்டு வெளியே வந்து நடனமாடிக்கொண்டு வானத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டும் என்பது தான்.
இந்த சவாலினை பிரபலங்கள் பலரும் முன்னெடுத்து செய்து வரும் நிலையில், இணைய ரசிகர்கள் சிலர் பழைய பாடல்களுக்கு இந்த Kiki பாடலின் ஒலியினை பின்இணைத்து பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மும்பையைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஓடும் ரயிலில் இந்த "Kiki Challenge" -ஐ செய்துள்ளனர். அந்த வீடியோவை யூடியூபில் பதிவிடப்பட்ட சிறிது நேரத்திலேயே பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவை வைத்தும், ரயில்வே நடைமேடையில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் கொண்டும் இளைஞர்களை ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் தேடி கண்டுபிடித்தனர். இத்தைகைய செய்யலை செய்த அந்த மூன்று இளைஞர்களுக்கும் வசாய் ரயில் நிலையத்தின் நடைமேடையை மூன்று நாட்களுக்கு சுத்தம் செய்ய ரயில்வே நிர்வாகம் தண்டனை வழங்கினர். மேலும் மேலும் "Kiki Challenge" இருக்கும் அபாயம் குறித்து மக்களுக்கு பிரசாரம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.