பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயலதிகாரியான இந்திரா நூயி, அமேசான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் குழுவில் இணைந்துள்ளார்.
சென்னையில் பிறந்த அவர், இங்கு பள்ளிப் படிப்பையும், பட்டப்படிப்பையும் நிறைவு செய்திருக்கிறார். உலகப் பிரபலம் பெற்ற குளிர்பான நிறுவனமான பெப்ஸியின் தலைவர் பொறுப்பில் இந்திரா நூயி 2006 முதல் 2018 வரை இருந்தார். சுமார் 13 ஆண்டுகள் பெப்சிகோவில் தலைமை செயல் அதிகாரியாக இருந்த அவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்தப் பதவியிலிருந்து விலகினார்.
இந்நிலையில் தற்போது அமேசான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் குழுவில் இந்திரா நூயி இணைந்துள்ளார். இதன் மூலம் அமேசான் நிர்வாகக் குழுவில் இடம்பெறும் இரண்டாவது பெண் எனும் பெருமையையும் இந்திரா நூயி பெற்றுள்ளார்.
முன்னதாக ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரோசாலிந்த்த ப்ரூவரை தனது இயக்குனராக அமேசான் நியமித்தது. அமேசானை பொறுத்தவரையில் நிர்வாக குழுவில் 11 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் நூயி, ப்ரூவர், ஜேமி கார்லிக், ஜூடித் மெக்ராத், பேட்ரிகா ஸ்டோன்ஸ்ஃபைர் ஆகிய 5 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.