ஹைட்ரோகார்பன் அபாயம்: தமிழக அரசு தடுத்து நிறுத்த பூவுலகின் நண்பர்கள் வலியுறுத்தல்

காவிரி டெல்டாவின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு காவிரி டெல்டாவில் மேற்கொண்டு ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க முயலும் ஓ.என்.ஜி.சியின் நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுக்கொள்வதாக பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.  

Written by - K.Nagappan | Last Updated : Mar 10, 2022, 02:35 PM IST
  • 9 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் பணி தொடங்கும் நிலை
  • புதிய கிணறுகளை அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி. முயல்வது கடும் கண்டனத்திற்குரியது
  • தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்
ஹைட்ரோகார்பன் அபாயம்: தமிழக அரசு தடுத்து நிறுத்த பூவுலகின் நண்பர்கள் வலியுறுத்தல் title=

இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் இயக்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''காவிரிப் படுகையில் Greater Narimanam ML Block, Adiyakkamangalam ML Block, Nannilam-I & Nannilam-II ML Block, Kali & Kali # 6 ML Block, Kuthanallur ML Block, Greater Kovilkalapal ML Block and Pundi ML Block ஆகிய ஏழு எண்ணெய் வயல்களில் 30 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்காக மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையானது கடந்த 2015-ம் ஆண்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருந்தது.

அனுமதி பெறப்பட்ட 30 கிணறுகளில் 21 கிணறுகளை மட்டுமே ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தற்போது வரை அமைத்துள்ளது. இன்னும் 9 கிணறுகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் விரைவில் முடிவடையவுள்ளதால் மீதமுள்ள 9 கிணறுகளை அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதியை மேலும் நீட்டிக்கக் கோரி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.

ஓ.என்.ஜி.சியின் விண்ணப்பத்தைப் பரிசீலித்த மத்திய அரசு சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு 2025-ம் ஆண்டு வரைக்கும் சுற்றுச்சூழல் அனுமதியை நீட்டிக்கலாம் என மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. இதன் காரணமாக விரைவில் காவிரி டெல்டாவில் மேலும் 9 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் பணி தொடங்கும் நிலை உருவாகியுள்ளது.

hydrocarbon

தமிழ்நாடு அரசு கடந்த 2020-ம் ஆண்டே காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியுள்ளது. இந்தச் சட்டத்தால் புதிதாக அனுமதி பெற்று எந்த ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் அமைக்க முடியாது. ஆனால், ஏற்கெனவே அனுமதி பெறப்பட்ட கிணறுகள் தொடர்ந்து இயங்குவதை இச்சட்டம் கட்டுப்படுத்தாது என்பதால் இச்சட்டத்தால் காவிரி டெல்டாவைப் பாதுகாக்க முடியாது என பூவுலகின் நண்பர்கள் சார்பில் தொடர்ந்து கூறி வருகிறோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் எங்கும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் காவிரி டெல்டா விவசாயிகளை கண்ணை இமை காப்பதுபோல காப்போம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஹைட்ரோகார்பன் கிணறுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான நிபுணர் குழுவும் அரசிடம் அண்மையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த நிலையில் புதிய கிணறுகளை தமிழ்நாட்டில் அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி. முயல்வது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

காவிரி டெல்டாவின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு காவிரி டெல்டாவில் மேற்கொண்டு ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க முயலும் ஓ.என்.ஜி.சியின் நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறோம். மேலும் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளது. 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News