ராமரின் பாதையில் சென்று கொரோனா வைரஸ் வாலியை அழிப்போம்: வானதி கிரிராஜ்

ஒழுக்க சீலர், உத்தம புருஷர் என அழைக்கப்பட்ட ராமர், போர் விதிகளை மீறி மறைந்திருந்து வாலியின் மீது அம்பு எய்தி வதம் செய்தார். அதே வழியில் கொரோனாவை ஒழிப்போம்.

Written by - Vanathi Giriraj | Last Updated : May 2, 2020, 08:46 PM IST
ராமரின் பாதையில் சென்று கொரோனா வைரஸ் வாலியை அழிப்போம்: வானதி கிரிராஜ் title=

புது டெல்லி: மழைக் காலம்,  இலையுதிர் காலம், வேனிற் காலம், வசந்த காலம் என்பது போல, இது கொரோனா காலம். ஆம் எங்கிருந்து தான் வந்ததோ இந்த கொரோனா? ஆம் இதற்கு விடை கிடைக்கவில்லை. என்றாலும் சீனாதான் என்று ஒரு பதில் கிடைக்கிறது. சீனாதான் என்று  உலகம் அடித்து சொல்கிறது.

ஆனால் சீனாவோ "நான் அவன் இல்லை" என்று முணுமுணுப்பாக பதில் சொல்லி விட்டு தன் வேலையை பார்த்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் அது செய்த சதி வேலைதான் இது என்பதற்கான சாட்சி கிடைக்கும் போது சீனாவில் காட்சிகள் மாறும். ஆட்சி மாறும். 

உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா கடுங் கோபத்தில் உள்ளது. விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்து கொண்டார் என்பது போல பிரதமர் லாக் டவுனை முன்னதாகவே அறிவித்தார். ஆனாலும் சில மக்களின் பிழையால் கொரோனா தொற்று இந்தியாவிலும் சற்று தீவிரமாக பரவித்தான் வருகிறது.

முன் கூட்டியே லாக் டவுன் அறிவித்தும், கோடான கோடி மக்கள் ஒத்துழைத்தும் கூட, ஒரு சில.. ஒரு சில நபர்களின் தவறு சில ஆயிரம் பேரின் அத்து  மீறல்கள் காரணமாக இன்று இந்தியாவிலும் நோயாளிகளின் எண்ணிக்கை முப்பதாயிரத்திற்கும் மேலாகி விட்டது.

தீர்வு என்று நம் வசம் இருப்பதெல்லாம் வீட்டில் அமைதியாக அமர்ந்து ஆரோக்கியத்தை பேணி காப்பதுதான். அதையும் மீறி வெளியே செல்ல வேண்டி இருந்தால் பாதுகாப்பான முககவசம், மேலும் அடிக்கடி கை கழுவுதல், கிருமி நாசினி பயன்படுத்துதல் என நீங்கள் எல்லாம் அறிந்ததுதான். ஊரடங்கு அமல் செய்து இந்த 39 நாட்களில் இதெல்லாம் ஒரு குழந்தை கூட சொல்லி விடும்.

இந்த கொரோனா ராமாயணத்தில் வரும் வாலியை நினைவுவூட்டுகிறது. அதாவது வாலியை எவராலும் ஜெயிக்க முடியாது. வாலிக்கு நேராக எவர் நின்று யுத்தம் செய்தாலும் யுத்தம் செய்பவரின் பாதி வலிமை மற்றும் சக்தி வாலிக்கு சென்று விடும். அப்படி ஒரு வரம் கிடைத்திருந்தது வாலிக்கு. இந்த கொரோனாவும் அப்படித்தான். 

இதை  நெருங்கினாலோ தொட்டாலோ நம் பலத்தை எடுத்துக் கொண்டு, நம் வாழ்க்கையையும் எடுத்துக் கொண்டு, அது மட்டும் வாழ்ந்து கொண்டே இருக்கும். ஆள் மாற்றி ஆள் மாற்றி  வாழ்ந்து கொண்டே இருக்கும். அப்போது அதை வெல்வதற்கு, ஒழுக்க சீலரான ராமர், உத்தம புருஷனான ராமர், போர் விதிகளை மீறி, மறைந்திருந்து வாலியின் மீது அம்பு எய்தி வதம் செய்தார். 

இப்போது நாமும் ஒழுக்கமாக, சுத்தமாக இருந்து ராமரின் பாதையில் சென்று, கொரோனா வைரஸை நேருக்கு நேர் சந்திக்காமல், இந்த கொரோனா வைரஸ் வாலியை வெல்ல வேண்டும். எனவே நாம் அனைவரும் இயன்ற வரை வீட்டிலேயே இருந்து அல்லது அந்த வைரஸ் நம்மை அடையாளம் கண்டு பிடிக்க முடியாதவாறு(??) முகமூடி அணிந்து, அதன் தொடர்பே வேண்டாம் என்று கோபத்துடன் அதை கை கழுவிவிடுங்கள். இன்னமும் சொல்லவேண்டும் என்றால், வெளியே இருந்து வீட்டுக்கு வந்தால் அந்த வைரஸின் சங்காத்தமே வேண்டாம் என்று அதற்கு தலை முழுகி குளித்து விடலாம். நமக்கும் அதற்கும் ஓட்டும் வேண்டாம். உறவும் வேண்டாம்.

இந்த ஊரடங்கு சமயத்தில் ஒவொருவருக்கும் தேவை பொறுமை, பொறுப்பு, கவனம், அதீத கவனமும் கூட.. இவைதான் இன்றைய தேதிக்கு தேவைப்படும் உத்தம குணங்கள்.

அப்படி  நல்ல பழக்கங்கள் மற்றும் குணங்களுடன் இருந்து நம்மை காத்துக் கொண்டால், நமக்காக தன்னலம் கருதாமல் உழைக்கும் மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் எல்லோரையும் பாதுகாத்தது போலாகும்.  

சீனா பொறுப்பில்லாமல் பரப்பிய வைரஸை பொறுப்புடன் செயல்பட்டு அழிப்போம்.  
 
மேலும், அந்த  கொரோனா வைரஸ் வாலியை, ராமனை போலவே மறைந்திருந்து அழித்து விட்டால், நம் இந்தியாவில் ராம ராஜ்ஜியம் மலரும். யார் ராமர்? இதில் இந்தியா வெற்றி பெற்றால் பிரதமர் முதல் கடைக்கோடி இந்தியன் வரை.. கொரொனாவுக்கு எதிரான போரில் அனைவரும் ராமரே. வாருங்கள் இந்தியர்களே ராமரின் பாதையில் சென்று கொரோனா வைரஸ் வாலியை அழிப்போம்.

Trending News