Isha: தாணிகண்டியின் டாடா, பிர்லாக்கள்; பழங்குடிப்பெண்கள் தொழில்முனைவோரான கதை

கோவையிலுள்ள பழங்குடி கிராமம் தாண்டிக்குடி. ஏறக்குறைய 53 வீடுகள், 200 மக்களைக் கொண்டுள்ள இந்தக் கிராமப் பெண்களுக்கு வெளியுலக தொடர்புகள் கிடையாது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 25, 2021, 06:23 PM IST
  • கோவையிலுள்ள பழங்குடி கிராமம் தாண்டிக்குடி.
  • ஏறக்குறைய 53 வீடுகள், 200 மக்களைக் கொண்டுள்ள இந்தக் கிராமப் பெண்களுக்கு வெளியுலக தொடர்புகள் கிடையாது.
  • இந்தக் கிராம மக்களுக்கு விவசாயமும் தெரியாது. பண்ணைக் கூலிகளாகவோ அல்லது தினக்கூலிகளாகவோ வேலை செய்பவர்கள்.
Isha: தாணிகண்டியின் டாடா, பிர்லாக்கள்; பழங்குடிப்பெண்கள் தொழில்முனைவோரான கதை title=

ஒரே வருடத்தில் 24 லட்சத்திற்கு விற்பனை, ஏறக்குறைய 10 லட்சம் லாபம் என்ற சாதனைப் பெண்களாய் மிளிர்கின்றனர் தாணிக்கண்டிப் பெண்கள். 

12 பெண்கள் ஒரு குழுவாக இணைந்து ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி சிலைக்கு அருகில் ஒரு சிறிய சிற்றுண்டி கடையை தொடங்க, முதல் மாதத்திலேயே 90 ஆயிரம் சம்பாதித்த அவர்கள் ஒரு வருடத்தில் கால் கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்துள்ள சாதனைப் பெண்களாகியுள்ளனர்.  

கோவையிலுள்ள (Coimbatore) பழங்குடி கிராமம் தாண்டிக்குடி. ஏறக்குறைய 53 வீடுகள், 200 மக்களைக் கொண்டுள்ள இந்தக் கிராமப் பெண்களுக்கு வெளியுலக தொடர்புகள் கிடையாது.

இந்தக் கிராம மக்களுக்கு விவசாயமும் தெரியாது. பண்ணைக் கூலிகளாகவோ அல்லது தினக்கூலிகளாகவோ வேலை செய்பவர்கள். 

இங்குள்ள பெண்களை சிறுமுனைவோராக மாற்றுவது என்ற முயற்சியில் ஈஷா (Isha) இறங்கியபோது, அது ஆகப்பெரும் சவாலாகவே இருந்தது என்கிறார் சுவாமி சிதகாசா.

ALSO READ | கோயில்களை பக்தி மிக்க சமூகத்தின் கைகளில் ஒப்படைப்பவருக்கே எனது ஓட்டு: சத்குரு

அரசின் திட்டங்கள் மற்றும் உதவிகளை நம்பியே பிழைத்து வரும் இந்த கிராம மக்களிடம் சென்று பேசுவது, குறிப்பாக அந்தப் பெண்களை தொழில்முனைவோராக்குவது என்ற விடாமுயற்சி இன்று விஸ்வரூப வெற்றியாக மாறியுள்ளது என்றும் சுவாமி சிதகாசா கூறுகிறார்.

"எப்படி இது சாத்தியமாயிற்று?" என்ற நமது கேள்விக்கு, சுவாமி வந்து எங்க வீட்ல பேசுனப்ப, எங்க வீட்டாளுங்க எல்லாம் 'இதெல்லாம் சரிபடாது. எங்களுக்கு ஒத்துவராது சாமி…வேணாமே' அப்படின்னு சொல்லிட்டாங்க. வீட்டை மீறி என்ன செய்யமுடியும்னு நாங்களும் பேசாம இருந்துட்டோம். ஆனா, அவங்க எங்க வீட்டாளுங்கள தொடர்ந்து சந்திச்சு பேசினாங்க. பல மாசம் அவங்க விடாம வந்து பேசினதோட விளைவு, இன்னிக்கு நாங்களும் ஒரு மனுஷின்னு தலைநிமிர்ந்து நிக்கறோம் என்று ஆனந்த கண்ணீருடன் தங்களது சிற்றுண்டி உணவகம் வளர்ந்த கதையை விவரிக்கிறார் சாந்தி.

தொடக்கத்தில் எந்த உணவுக்கு எந்த விலை நிர்ணயிப்பது என்பது கூட இந்தப் பெண்களுக்குத் தெரியாது. பெரிய முதலீடு எதுவும் போட முடியாத சூழல். அவங்க வீட்லேர்ந்து சில பாத்திரங்கள், நம்ம ஈஷா உணவகத்திலிருந்து அவர்களுக்கு உதவியாக அளித்த சில பாத்திரங்களைக் கொண்டுதான் இந்த கடையை அவர்கள் தொடங்கினாங்க. நிறைய குழப்பம், வாக்குவாதம் – அதனால ஒரு அக்கா அந்தக் கடையிலேர்ந்து வெளியேற வேண்டிய சூழல் எனப் பலப் போராட்டங்களை முதல் சில மாதங்களில் சந்திச்சாங்க. ஆனால், சுவாமி சிதகாசா தொடர் பயிற்சி, கலந்துரையாடல் என்ற பல்வேறு மட்ட நடவடிக்கைகள் இன்றைக்கு தாங்களே விலை நிர்ணயிப்பது தொடங்கி லாபத்தை பிரித்தளிப்பது வரை பார்த்துக் கொள்ளும் திறமையை இவர்களுக்குள் வளர்த்திருக்கிறது என்கின்றனர் இந்தக் குழுப் பெண்கள்.

ALSO READ | Isha: பாறைநிலத்தையும் சோலைவனமாக்க முடியும் என்பதை உணர்த்திய சாதனை பெண்மணி

எங்க வீட்ல தீபாவளிக்குத்தாங்க புதுசு எடுப்போம். அதுவும் எங்க வீட்டுக்காரரு மனசுவந்து எடுத்து தருவாரு. ஆனால், கடந்த இரண்டு வருஷமா வருமானம் பத்தலை. புதுத்துணி எடுக்க முடியலை. இந்த வருஷம் நான் சம்பாதிச்ச பணத்தில அவருக்கும் எனக்கும் தீபாவளிக்கு புதுத்துணி எடுத்தேங்க. அந்த சந்தோஷத்தை வார்த்தையில விவரிக்க முடியாதுங்க என்கிறார் இந்தக் குழுவிலுள்ள மற்றொரு பெண்மணி.

இந்த சிற்றுண்டி லாபத்தை இரட்டிப்பாக்கும் வேலையிலும் இந்தப் பெண்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

ஆதியோகி சிலையிலிருந்து ஈஷா யோகா மையத்திற்கு நடந்து வரமுடியாதவர்கள் 8 சீட்டுகள் உள்ள மோட்டார் வாகனத்தை பயன்படுத்துவர். அந்த வாகனத்திற்கு ரூ 10 வாடகையாக வசூலிக்கப்படும்.  இதில் சம்பாதித்த பணத்தை அந்த மோட்டார் வாகனத்தில் முதலீடு செய்து அதன்மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 3 ஆயிரம்  வருமானம் ஈட்டுவதாகக் கூறுகிறார் உஷா. 

வெளிநாட்டிலிருந்தும், தொலைதூரத்திலிருந்தும் வரும் மக்களுக்கு நல்ல , தரமான சிற்றுண்டியை குறைவான பணத்திற்கு தரும் இவர்களின் கடைக்கு சுற்றுவட்டார மக்களிடமிருந்தும் நல்ல வரவேற்பு உள்ளது. 

எங்கோ ஒரு கடைகோடி கிராமத்தில் முகம்தெரியாத கூலித் தொழிலாளர்களாக இருந்த பெண்களை, தனது சொந்தக் காலில் நிற்க வைத்தது மட்டுமின்றி அவர்களுக்கான அடையாளத்தை ஈஷா ஏற்படுத்தி தந்துள்ளது.  முகம் தெரியாத தங்களுக்கு முகவரி அளித்த ஈஷாவை நன்றியுடன் பார்க்கும் இவர்கள், தங்களைப் போன்ற பலரின் வாழ்விற்கு விடிவெள்ளியாக மாறவேண்டும் என்பதே தங்களது லட்சியம் என்றும், அவற்றை ஈஷாவுடன் இணைந்து சாதிப்போம் என்றும் உறுதியாகக் கூறுகின்றனர்.

ALSO READ | விவசாயத்தில் ஒரு யுகப்புரட்சி - விவசாயத்திற்கு விவசாயியே தீர்வான கதை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News