திருவாதிரை நாளன்று விரதம் இருப்பது மிகவும் சிறந்தது என்கிறார் யாழ்ப்பாணம் ஆறுமுகம் நாவலர். அன்று சிறிதளவு களி மட்டும் சாப்பிடலாம். மற்றபடி உணவேதும் உட்கொள்வது கூடாது.
அதிகாலை எழுந்து, நீராடி, உங்கள் ஊரிலுள்ள சிவாலயத்தில் உள்ள நடராஜர் சந்நிதியில் நடைபெறும் திருவாதிரை அபிஷேகத்தை கண்டு களிக்கலாம். திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும்.
அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது.
சில சிவாலயங்களில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் அன்று பின் இரவு அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுப் பத்தாம் நாள் சூரிய உதயத்தில் தரிசனம் நடைபெறும்.