வெற்றி பெற்றவர் வாழ்க்கை... அப்படியே பின்பற்றலாமா? சத்குரு கூறுவது என்ன..!!

இன்று பலர் வெற்றிபெற்ற பிரபலங்களை பார்த்து அவர்களது வாழ்க்கையை அப்படியே காப்பி அடிக்கத் துவங்கியுள்ளனர். சங்கரன் பிள்ளை நகைச்சுவைகளை கூறி, உண்மையில் வெற்றிபெற நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் சத்குரு!

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 4, 2021, 01:17 PM IST
  • ஐந்து வயதில் பட்டாம்பூச்சியைத் தொட்டதும், அதன் வண்ணங்கள் உங்கள் கையில் ஒட்டிக்கொண்டபோது, அதை விட உலகில் பெரிதாக எதுவுமே தெரியவில்லை.
  • குடிகாரனோடு மல்லுக்கு நிற்க வேண்டாமேயென்று எல்லோரும் ஒதுங்கி வழிவிட்டார்கள்.
  • உங்களில் பலர் இப்படித்தான் எந்தப் பேருந்தில் ஏறியிருக்கிறோம் என்பது புரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
வெற்றி பெற்றவர் வாழ்க்கை... அப்படியே பின்பற்றலாமா? சத்குரு கூறுவது என்ன..!!  title=

சத்குரு: கடைத்தெரு, பேருந்து நிலையம், கல்லூரி, கோயில் என்று எங்கே வேண்டுமானாலும் சில நிமிடங்கள் நில்லுங்கள். கண்களில் தென்படுபவர்களை கவனியுங்கள்.

எத்தனை முகங்கள் சந்தோஷமாயிருக்கின்றன? நூறு பேர் கடந்து போனால், அதில் நான்கோ ஐந்தோ முகங்களில்தான் சிரிப்பிருக்கிறது.

அந்த முகங்களுக்குச் சொந்தக்காரர்களும் இருபது இருபத்தைந்து வயதுக்குக் கீழேதான் இருக்கிறார்கள். முப்பது வயது ஆகிவிட்டவர்கள் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டவர்கள் போல் தெரிகிறார்கள். வறட்சியாகப் பார்த்துக் கொண்டு, மரண வீட்டிலிருந்து திரும்புபவர்கள் போல் சீரியஸான முகத்துடன் விரைந்துகொண்டிருக்கிறார்கள்.
வெளியே எதற்குப் போக வேண்டும்? உங்களையே கண்ணாடியில் பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்களுடைய ஐந்து வயதில் ஒரு பட்டாம்பூச்சியின் பின்னால் துரத்திக்கொண்டு ஓடினீர்களே, அப்போது உங்கள் முகத்தில் இருந்த ஆனந்தமும், கொண்டாட்டமும் இப்போது தெரிகிறதா?

ஐந்து வயதில் பட்டாம்பூச்சியைத் தொட்டதும், அதன் வண்ணங்கள் உங்கள் கையில் பளபளவென்று ஒட்டிக்கொண்டபோது, அதை விட உலகில் பெரிதாக எதுவுமே தெரியவில்லை. அப்போது எப்படிப் பொங்கிப் பொங்கி ஆனந்தமாயிருந்தது?

ஐந்து வயதில் உங்களிடம் இருந்தது என்ன? இப்போது இருப்பது என்ன? பெரிய படிப்பு, கம்ப்யூட்டர், இந்த வீடு, மோட்டார் சைக்கிள், கார், ஒன்றாம் தேதி டாணென்று அக்கவுன்ட்டில் சம்பளம், தூங்கப் போனாலும் கூடவே தூக்கிப் போகும் செல்போன்.. எவ்வளவு சேர்த்துவிட்டீர்கள்? சில நூற்றாண்டுகளுக்கு முன், உலகையே வென்றுவிட்டதாக நினைத்த பேரரசர்களுக்குக் கூட இத்தனை வசதிகள் கிடைத்ததில்லை.

ALSO READ | விவசாயத்தில் ஒரு யுகப்புரட்சி - விவசாயத்திற்கு விவசாயியே தீர்வான கதை

இருந்தாலும் உங்கள் சந்தோஷம் அதேவிகிதத்தில் வளர்ந்திருக்கிறதா?

ஒருமுறை மூச்சு முட்டக் குடித்துவிட்டு சங்கரன்பிள்ளை பஸ் ஸ்டாப்பிற்கு வந்தார். அவர் போக வேண்டிய பஸ் வந்தது. அதில் கூட்டம் பிதுங்கி வழிந்தது. எப்படியோ முண்டியடித்து அதில் ஏறிவிட்டார்.

பத்துப் பதினைந்து பேர் காலையாவது மிதித்து, நான்கைந்து பேர் முகங்களையாவது முழங்கையால் நெட்டித் தள்ளி, ஒரு வழியாக உள்ளே நகர்ந்து வந்துவிட்டார்.

ஒரு வயதான பெண்மணிக்குப் பக்கத்து இருக்கையில் இருந்தவர் எழுந்திருப்பதைப் பார்த்ததும், இன்னும் பலரை ஒதுக்கித் தள்ளி பாய்ந்தார். குடிகாரனோடு மல்லுக்கு நிற்க வேண்டாமேயென்று எல்லோரும் ஒதுங்கி வழிவிட்டார்கள்.

சங்கரன்பிள்ளை பெருமிதத்தோடு அந்த இருக்கையில் தொப்பென அமர்ந்தார். உட்கார்ந்த வேகத்தில் அங்கே உட்கார்ந்திருந்த மூதாட்டியின் மீது சரிந்தார். அவள் மடியில் வைத்திருந்த உடமைகளெல்லாம் உருண்டோடின.

அவற்றைப் பொறுக்கிக்கொண்டு கிழவி கோபத்தோடு அவரைத் திரும்பிப் பார்த்தாள்.

“நீ நேரே நரகத்திற்குத்தான் போவாய்” என்று ஆத்திரத்தோடு சொன்னாள். சங்கரன்பிள்ளை குதித்து எழுந்தார்.

“வண்டியை நிறுத்துங்கள். நான் போக வேண்டியது காந்திநகருக்கு. தப்பான ரூட்டில் ஏறிவிட்டேன்” என்று கத்தினார்.

உங்களில் பலர் இப்படித்தான் எந்தப் பேருந்தில் ஏறியிருக்கிறோம் என்பது புரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஏறுவதும், இறங்குவதுமாக அல்லாடிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆசைப்பட்டது கிடைக்காதபோது, சோகத்தில் முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்வதே முட்டாள்தனம். ஆசைப்பட்டது கிடைத்தபோதிலும், ஏன் முழுமையாக சந்தோஷத்தை அனுபவிக்கத் தெரியாமல் தவிக்கிறீர்கள்?

உங்களுக்கு டெண்டுல்கரைப் போல் கிரிக்கெட் ஆட வேண்டும். ஐஷ்வர்யா ராயைப் போல் அழகாய் இருக்க வேண்டும். பில்கேட்ஸைப் போல் பணக்காரராக இருக்க வேண்டும்.

இந்த மாதிரி ஒரு வீடு. அந்த மாதிரி ஒரு கார். அவரைப் போல் ஒரு வாழ்க்கை. பலனை முதலில் தீர்மானித்தீர்கள். அதை எதிர்பார்த்து ஒரு செயலில் இறங்கினீர்கள். ஒத்து வருகிறதோ, இல்லையோ, அதை உங்கள் இயல்பாக்கிக்கொள்ளப் பார்க்கிறீர்கள்.

‘தமிழ்நாட்டில் இப்போது சாஃப்ட்வேர் பிஸினஸ்தான் கொடிகட்டிப் பறக்கிறது’ என்று யாரோ அறிவுரை சொன்னார்கள். அதற்குத் தயாராகிறீர்கள்.

வேறொருவர் உங்களைப் பரிதாபமாகப் பார்ப்பார்.

‘அதோ, அங்கே சாயம் போன சட்டையோடு அலைந்துகொண்டிருக்கிறாரே, அவர் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருந்தவர்தான். துரத்தி அனுப்பிவிட்டார்கள். இப்போது கையேந்தி பவன் வைக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார். பேசாமல் ஷேர் பிஸினஸ் செய்யேன்’ என்பார்.

ஷேர் பிஸினஸில் இருக்கும் தேளும் பாம்பும் மட்டும் உங்களை விட்டுவைக்குமா?

டெண்டுல்கர் அணிவது போன்ற ஷூக்களை அணிந்து, அதேபோன்ற கால் பேடுகளைக் கட்டிக்கொண்டால், கிரிக்கெட் வந்துவிடுமா? டெண்டுல்கர் தன்னுடைய பேட்டையே உங்களிடம் கொடுத்தால்கூட, அவர் ஆடும் அதே ஆட்டத்தை ஆட உங்களால் இயலுமா?

இன்னொருவரைப் பார்த்து அதேபோல் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சி செய்தால், பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கிப் போய், குரங்கு போல் நடந்துகொள்ளப் பார்க்கிறோம் என்றல்லவா அர்த்தம்? உங்கள் திறமையை முழுமையாக எப்படி உபயோகப்படுத்திக்கொள்வது என்பதல்லவா உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும்?

உங்கள் இயல்பைப் புரிந்துகொள்ளாமல், எதிர்த்திசையில் துடுப்பு போட்டால், வாழ்க்கை நரகமாகித்தான் போகும்.

இப்படித்தான் சங்கரன் பிள்ளை தன் இரண்டு நண்பர்களுடன் ரயில் நிலையத்துக்கு வந்தார். மூவருக்கும் சேர்த்து ஒரே ஒரு பயணச்சீட்டு வாங்கினார். அவருக்குப் பின்னால், கிராமத்திலிருந்து வந்திருந்த மூன்று பேர் இதைக் கவனித்தனர்.

ஒற்றை டிக்கெட்டில் எப்படி மூவர் பயணம் போக முடியும் என்று அவர்களுக்குப் பிரமிப்பாக இருந்தது. ரயிலில் சங்கரன் பிள்ளையையே அவர்கள் கவனித்துக்கொண்டிருந்தனர்.

ALSO READ | ஈஷாவின் இயற்கை இடுப்பொருள் தயாரிக்கும் பயிற்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற விவசாயிகள்

 

டிக்கெட் பரிசோதகர் வருவதைப் பார்த்ததும், சங்கரன்பிள்ளையும், அவர் நண்பர்களும் சேர்ந்து ஒரே டாய்லெட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டனர். மற்றவர்களுடைய பயணச் சீட்டுக்களை சரிபார்த்துவிட்டு, பரிசோதகர் டாய்லெட் கதவைத் தட்டினார்.

“உள்ளே யார்? டிக்கெட் ப்ளீஸ்” என்றார். வெளியில் ஒரு கை டிக்கெட்டுடன் நீண்டது. அவர் அதை சரிபார்த்துவிட்டுப் போய்விட்டார். அப்புறம் உள்ளேயிருந்து மூவரும் வெளியில் வந்து உட்கார்ந்துகொண்டார்கள்.

கிராமத்திலிருந்து வந்தவர்களுக்கு சங்கரன் பிள்ளையின் தந்திரம் புரிந்துவிட்டது. ‘ஆஹா! பிரமாதமான ஐடியாவாக இருக்கிறதே’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டனர்.

ஊர் திரும்பும் நாள் வந்தது. அந்த மூவரும் சேர்ந்து ஒரே ஒரு டிக்கெட் வாங்கினர். பின்னாலேயே தன் இரு நண்பர்களுடன் சங்கரன் பிள்ளை வந்தார். ஆனால், இந்த முறை அவர்கள் ஒரு டிக்கெட் கூட வாங்காமல் ரயில் ஏறுவதை கிராமத்தவர்கள் பார்த்தனர்.
அவர்களுக்குக் குழப்பமாகிவிட்டது. பரிசோதகரை சங்கரன் பிள்ளை எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்று அவர்களுக்குப் புரியவேயில்லை.

ALSO READ | ”எதிர் செயல் செய்யாமல் விழிப்புணர்வாக பதில் செயல் செய்வோம்” - சத்குரு

 

டிக்கெட் பரிசோதகர் வருவதைப் பார்த்ததும், அந்த மூவரும் ஒரு டாய்லெட்டில் போய் ஒளிந்துகொண்டார்கள்.

சங்கரன்பிள்ளை தன் நண்பர்களுடன் எழுந்தார். எதிர்ப்புறம் இருந்த மற்றொரு டாய்லெட்டுக்குள் நண்பர்கள் இருவரும் போய்விட்டார்கள். கிராமத்தவர்கள் ஒளிந்திருந்த டாய்லெட் கதவை சங்கரன்பிள்ளை தட்டினார். “யார் உள்ளே? டிக்கெட் ப்ளீஸ்” என்றார்.

பரிசோதகர் தட்டுகிறார் என்று நினைத்து, உள்ளேயிருந்து ஒரு கை டிக்கெட்டுடன் நீண்டது. வெளியே காத்திருந்த சங்கரன்பிள்ளை அந்த டிக்கெட்டை வாங்கிக்கொண்டு, எதிர் டாய்லெட்டுக்குள் போய்விட்டார்.

அடுத்தவர் போல் செய்து பார்த்தால், அதேபோல் நமக்கும் கிடைத்துவிடுமா? சங்கரன்பிள்ளை மாதிரி செய்யப் பார்த்து இருப்பதையும் இழந்து நின்ற கிராமத்தவர்கள் கதிதான் வந்து சேரும்.

இன்னொருவரை ஒப்பிட்டுக் காட்டி அவர் போல் இருக்க வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே உங்களுக்குப் பெரியவர்களால் சொல்லப்பட்டு வந்ததால் கிளர்ந்த நோய் இது. விபரீதமான பாதிப்பை ஏற்படுத்தும் முன், முதலில் இந்நோயைக் களைந்துவிடுங்கள்.

ALSO READ | “மரம் நட விரும்பு” – மர ஆர்வலர்களுக்கு களம் அமைத்து கொடுக்கும் ஈஷா..!

இத்தனை கோடிக்கோடி ஜனத் தொகையில் ஒரு மனிதனுக்கு இருக்கும் அதே திறமை இன்னொரு மனிதனுக்குக் கிடையாது. குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையை வேறொருவர் புரிந்துகொள்ளும் முறை வேறு. நீங்கள் புரிந்துகொள்ளும் முறை வேறு.

வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை நமக்கு உந்து சக்தியாகமட்டுமே இருக்க முடியுமே தவிர, அதையே வெற்றியின் சூத்திரமாக எடுத்துக்கொள்ளப் பார்ப்பது அடிமுட்டாள்தனம்.

வாழ்க்கையில் வெற்றி பெற்று நீங்கள் முதலாவதாக வரவேண்டுமென்றால், உங்கள் திறமைகளைப் பட்டை தீட்டி, அவற்றை முழுமையாகப் பயன்படுத்தி செயலாற்ற வேண்டும்.

Trending News