உலகம் மனிதனுக்கு மட்டுமானது அல்ல ; அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது ; உரிமையானது. அதனால்தான், "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வழிவகை செய்திடல் வேண்டும்" என்றார் இராமலிங்க அடிகளார்.
அப்படியிருக்கும் போது, மனிதனோடு மனிதனாகப் பின்னி பிணைந்து குடும்பத்தில் ஒருவராக வாழ்கிற பறவையினம்தான் சிட்டுக்குருவி. மேலும் மனித இனத்னோடு அடைக்கலம் ஆவதால், அவற்றை அடைக்கலாங் கூருவி என்றும் கூறுவர்.
சிட்டுக்குருவி வீடுகளில் கூடுகட்டினால், அக்குடும்பத்தில் தலைமுறைகள் வாழையடி வாழையாக தழைத்தோங்கும் என்கிற அசாத்திய நம்பிக்கை இன்றளவும் கிராமங்களில் வசிக்கும் மக்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றி நிற்கின்றன. அதனால் தான் , வீடுகளில் குருவி கூடு கட்டினால், அவற்றை ஒருபோதும் கலைக்கமாட்டார்கள்.
மேலும் படிக்க | உலக சிட்டுக்குருவிகள் நாள்; சிட்டுக்குருவிகளுக்கு பிறந்த நாள் கொண்டாடும் குடும்பம்
பெரும்பாலும் சிட்டுக்குருவியானது வீடுகளில் உள்ள பரண், மாடம், விட்டம் மற்றும் ஓடுகளின் இடுக்குகளில் உள்ள இடைவெளிகளில் கூடு கட்டி வசிக்கும். மேலும் இன்றைய காலகட்டத்தில் நகர்ப் புறங்களிலும், மாநகரங்களிலும் கான்கிரீட் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. மேலும் இதுபோன்ற பெரும்பாலான குடியிருப்புகளில் வெளிக்காற்றானது; வீட்டுக்குள் வராத வகையில் குளிர்சாதன வசதியைப் பெரும்பாலோர் பயன்படுத்துவதால், சிட்டுக்குருவிகள் கூடுகட்டி குஞ்சு பொரிக்க போதிய வசதிகள் இல்லாமல் போய்விட்டது என்பதே மறுக்கமுடியாத உண்மை.
அதனால், சிட்டுக்குருவியானது தன் இனப்பெருக்கத்துக்கான வாழ்வியல் சூழலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. குறிப்பாக சொல்வதென்றால், கடந்த 20ஆண்டுகளில் சிட்டுக்குருவிகளின் இனங்களில் 60சதவிகிதம் அழிந்துவிட்டது என்கிற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் புள்ளிவிவரங்களுடன் வெளியாகியுள்ளன.
அவற்றைத் தடுத்து நிறுத்தி, அப்பறவை இனத்தைப் பாதுகாக்கவேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு, 2010ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. மேலும் மனிதர்கள் மேற்கொள்ளும் இயற்கைக்கு முரணான சுற்றுச்சூழல் நடவடிக்கையானது சிட்டுக்குருவியின் அழிவுப் பாதைக்கு அடித்தளமிட்டுள்ளன என்றால் அது மிகையாகாது!
செல்போனின் உபயோகம் அதிகரிக்க தொடங்கிய நாள்முதல் சிட்டுக்குருவிகளின் அழிவும் அதிகரிக்க தொடங்கிவிட்டன. அதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது ; செல்போன் டவர்களில் இருந்து வெளியேறும் அதிகபட்சமான கதிர்வீச்சானது சிட்டுக்குருவியின் கருவையே சிதைக்கும் அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதுதான். ஒருவேளை அது முட்டையிட்டாலும் அதன் கருவானது முழு வளர்ச்சியை அடைவதில்லை.. அதனால் சிட்டுக்குருவி இனமானது நாளுக்குநாள் அழிவுப்பாதையை நோக்கி செல்கின்றன.
இதில் வருத்தத்துக்குரிய செய்தி என்னவென்றால்; 13ஆண்டுகள் ஆயுளைக் கொண்ட சிட்டுக்குருவியானது ; 5ஆண்டுகளுக்குள் தன் வாழ்நாளை முடித்துக் கொள்கிறது என்பதுதான்.
இனியாவது பிற உயிரினங்கள் பாதிக்கப்படாத வகையில் வாழ்வியல் சூழலை அமைத்துக்கொள்ள மனித இனம் முன்வரவேண்டும். அப்போதுதான் இந்த பரந்து விரிந்த உலகம் மனித இனத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல ; எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது என்பதை உணர்த்த முடியும்; நிரூபிக்க முடியும். ஆகையால், மனிதனோடு மனிதனாகப் பின்னி பிணைந்து வாழும் சிட்டுக்குருவி இனத்தை அழிவுப்பாதையில் இருந்து மீட்டெடுக்க உலக சிட்டுக்குருவி நாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.
[இரா. அமர்வண்ணன் ]
மேலும் படிக்க | சிட்டுக்குருவிகள் இப்படித்தான் வாழ்கிறதா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR