மலேசிய நாடாளுமன்றம் ''பிரதமர் நஜிப் ரசாக்'' தலைமையில் கலைப்பு!

மலேசிய நாட்டில் பிரதமர் நஜிப் ரசாக் தலைமையில் பி.என். என்று அழைக்கப்படுகிற பாரிசன் நே‌ஷனல் கூட்டணியின் ஆட்சி நடந்து வருகிறது.

Last Updated : Apr 7, 2018, 12:18 PM IST
மலேசிய நாடாளுமன்றம் ''பிரதமர் நஜிப் ரசாக்'' தலைமையில் கலைப்பு! title=

தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் கடந்த 1959-ல் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. தற்போது பிரதமர் நஜீப் ரசாக் தலைமையிலான பாரிசன் நேஷனல் கூட்டணி ஆட்சியில் உள்ளது.

முன்னதாக, மலேசியா பிரதமர் நஜிப் ரசாக் கடந்த 2013-ம் ஆண்டு பதவியேற்றார். அவரது பதவி காலம் நிறைவடைய இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. 

இந்த நிலையில், அந்த நாட்டின் நாடாளுமன்றத்தை பிரதமர் நஜிப் ரசாக் நேற்று கலைத்து விட்டார். அதற்கு மன்னர் சுல்தான் ஐந்தாம் முகமது ஒப்புதல் அளித்து விட்டார். எனவே நாடாளுமன்ற கலைப்பு, இன்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

மலேசிய நாட்டு சட்டத்தின்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி  இன்னும் ஒரு வாரத்திற்குள் தேர்தல் தேதியை வெளியிட தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

தேர்தலில் பாரிசன் நேஷனல் கூட்டணிக்கும் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது தலைமையிலான பாக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. மொத்தம் 222 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 505 மாகாண தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

நஜிப் ரசாக்கின் ஆட்சி காலத்தில் அவர்  மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நஜிப் ரசாக், எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது கட்சியுடன் கடும் சவாலை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

இருப்பினும் நஜிப் ரசாக் அணி வெற்றி பெற்று விடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. காரணம், மகாதிர் முகமதுவின் எதிர்க்கட்சி அணிக்கும், ‘பாஸ்’ என்று அழைக்கப்படுகிற மலேசிய இஸ்லாமிய கட்சிக்கும் இடையே ஏற்பட்டு உள்ள பிளவு, எதிர் ஓட்டுகளை சிதறடித்து விடும் என நம்பப்படுகிறது.

தேர்தலில் 1.49 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மலேசியாவில் வசிக்கும் 20 லட்சம் இந்தியர்களில் 11 லட்சம் பேர் வாக்குரிமைப் பெற்றுள்ளனர். பெரும்பான்மை மலாய் முஸ்லிம்களின் வாக்குகளை குறிவைத்தே அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்தி வருகின்றன. எனினும் இந்தியர்களின் வாக்குகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Trending News