கோலிவுட்டின் பிரபல இயக்குநர்களுள் ஒருவராக விளங்குபவர், விக்னேஷ் சிவன். இவர், தமிழ் சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ எனப்புகழப்படும் நயன்தாராவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் மீது தற்போது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
விக்னேஷ் சிவன்-நயன்தாரா:
சிம்புவை வைத்து ‘போடா-போடி’ படத்தை இயக்கி அறிமுகமான விக்னேஷ் சிவன். 2015ஆம் ஆண்டு நயன்தாரா-விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கினார். இந்த படம் வெற்றியடைய, இவருக்கு தமிழ் சினிமாவில் தனி அங்கீகாரம் கிடைத்தது. 7 வருட காதலுக்கு பிறகு, நயன்தாராவும் விக்கியும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமண வாழ்க்கையில் இணைந்தனர். ஒரு பக்கம் நயன்தாரா சினிமாவை விட்டு விலகுவதாக வதந்திகள் பரவி வர, இன்னொரு பக்கம் விகன்னேஷ் சிவன் பக்கம் இன்னொரு பிரச்சனை புதிதாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
காவல் நிலையத்தில் புகார்..
விக்னேஷ் சிவனின் தந்தையின் பெயர் சிவக்கொழுந்து. இவர், திருச்சி மாவட்டத்தில் உள்ல லால்குடி என்ற பகுதியை சேர்ந்தவர். இவருக்கு உடன் பிறந்தவர்கள் 9 பேர் உள்ளனர். இவர்களில், விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் தனது குடும்பத்துடன் லால்குடியில் வசித்து வருகிறார். விக்கியின் சித்தப்பா குஞ்சிதபாதம் தனது மனைவி சரோஜாவுடன் கோவையில் வசித்து வருகிறார். நேற்றி, லால் குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த விக்னேஷ் சிவனின் சித்தப்பா தனது அண்ணன் மாணிக்கத்துடன் சென்று புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
சொத்தை ஏமாற்றினரா..?
குஞ்சிதபாதம் கொடுத்துள்ள புகாரில், எங்களுக்கு தெரியாமல் அண்ணன் சிவகொழுந்து (விக்னேஷ் சிவனின் அப்பா) சொத்தை ஏமாற்றி விற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த சொத்தில் பல வில்லங்கங்கள் உள்ளதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அனைவருக்கும் பொதுவான சொத்தை விற்ற கிரைய பத்திரத்தில் மேற்படி நிலத்தில் பிற்காலத்தில் ஏதேனும் வில்லங்கம் வந்தால் தன்னுடையை சொத்து அல்லது தன் வாரிசுகளின் சொத்துக்களின் மூலமாக வில்லங்கத்தை ஈடு செய்வதாக கூறி அந்த நிலத்தை விக்னேஷ் சிவனின் தந்தை விற்பனை செய்துள்ளதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலத்தை மீட்க கோரிக்கை..
மோசடியாக சொத்தை விற்றதன் பேரில், சிவகொழுந்துவின் மனைவி மீனாகுமாரி மீதும் அவரது வாரிசுகளான அவரது மகன் விக்னேஷ் சிவன் மீதும் மருமகள் நயன்தாரா மீதும் மற்றும் மகள் ஐஸ்வர்யா மீதும் கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நிலத்தை விற்ற முழு தொகையை தங்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தனது புகார் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார் குஞ்சிதபாதம்.
உடல்நலக்குறைவால் பாதிப்பு..
தற்போது போலீசில் புகார் கொடுத்துள்ள விக்னேஷ் சிவனின் சித்தப்பா தனக்கு இருதயத்தில் நான்கு குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதை சரிசெய்ய உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், ஏழ்மை நிலையில் உள்ள தன்னிடம் அவ்வளவு பெரிய சிகிச்சையை செய்ய வசதி இல்லாததால் சொத்தை விற்று அந்த பணத்தில் தனக்கான பங்கை கேட்டதாகவும் அப்போதுதான் விக்னேஷ் சிவனின் தந்தை அனைவரையும் ஏமாற்றி ஏற்கனவே சொத்தை விற்றதும் தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.
விக்னேஷ் சிவன் உதவ வேண்டும்..
விக்னேஷ் சிவனின் இந்த சொத்து பிரச்சனை காரணமாக ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரனை நடந்ததாகவும் அதில் உடன் பிறந்தவர்கள் 8 பேருக்கும் உரிமை உள்ளதாக தீர்ப்பு வந்ததாகவும் விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவனின் தாயார் மீனா குமாரி மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இருவரும் தலையிட்டு உதவினால்தான் இந்த பிரச்சனை தீரும் எனவும் அவர் கூறினார். தற்போது இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள குஞ்சிதபாதமின் உடல்நிலையில் கருத்தில் கொண்டு அவர்கள் தங்களுக்கு உதவ வேண்டும் என அவரது மனைவி கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க | இந்த ஐந்து காரணத்திற்காக 'ஸ்வீட் காரம் காஃபி' வெப் சீரிஸை கட்டாயம் பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ