மாமனிதன் திரை விமர்சனம் - மனிதர்கள் சுருங்கிப்போன உலகத்தில் ஒரு மாமனிதன்

சீனுராமசாமி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் மாமனிதன் திரைப்பட விமர்சனம்

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 23, 2022, 11:31 PM IST
  • விஜய் சேதுபதியும், சீனுராமசாமியும் 4ஆவது முறையாக இணைந்திருக்கின்றனர்
  • படத்துக்கு யுவனும் இளையராஜாவும் இசையமைத்திருக்கின்றனர்
மாமனிதன் திரை விமர்சனம் - மனிதர்கள் சுருங்கிப்போன உலகத்தில் ஒரு மாமனிதன் title=

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த சீனு ராமசாமியின் படைப்பு மாமனிதன். ஒரு எளியவன் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருக்கும்போது ஒரு ஆசை தோன்றினால்; அந்த ஆசை தன் பிள்ளைகளுக்காக இருந்து அந்த ஆசையின் வழி அவனுக்கு வேறு திசைகளை காண்பித்தால்; அந்த திசையெல்லாம் நல்லவர்கள் இருந்தால் அதுதான் மாமனிதன் (மாமனிதர்கள்).

இசைஞானி இளையராஜா பிறந்த ஊரான பண்ணைபுரத்தில் முதல் ஷாட் வைத்தது, இஸ்லாமியருக்கும் இந்துவுக்கும் உறவு தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது என காட்சிப்படுத்தியது என்று சீனுராமசாமியின் டச் அங்கங்கே தென்படுகிறது. விஜய் சேதுபதி நடிப்பு பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒரே வார்த்தைதான்,  “சேது உங்க ஸ்டைல மாத்திக்கோங்க போர் அடிக்குது”. 

 vijay sethupathi

படம் முழுக்க ஸ்கோர் செய்யக்கூடிய ஆர்ட்டிஸ்ட் விஜய் சேதுபதி. ஆனால் இந்தப் படத்தில் அறுதியிட்டு சொல்ல வேண்டுமென்றால் 5 சீன்களைத் தாண்டி விஜய் சேதுபதியின் நடிப்பு பெரிதாக ஈர்க்கவில்லை. ஒரே உடல்மொழி, ஒரே மாதிரியான டயலாக் டெலிவிரி என அந்த மகா நடிகன் இந்த மாமனிதனில் நடிக்க முயற்சி செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

காயத்ரியின் நடிப்பு சொல்லிக்கொள்ளும்படி இருந்தாலும் பெரிதாக கவனத்தை கவரவில்லை. குறை இல்லாத படமா என்றால் அப்படி எந்தப் படமும் வந்ததில்லை, வரப்போவதுமில்லை. ஆனால் சீனுராமசாமி போன்றவர்களிடம் ரசிகர்கள் எதிர்பார்த்து வருவது உணர்வுரீதியாக கனெக்ட் ஆகும் என்ற எண்ணத்தில்தான். அது மாமனிதனில் மிஸ்ஸிங்.

தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை காட்சிப்படுத்தியது, ஆலப்புழாவின் அழகு என ஒளிப்பதிவும், லொக்கேஷனும் உண்மையில் பிரமிக்க வைக்கிறது. செட்டுகளில் முடங்கிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை மீண்டும் அவுட்டோருக்கு அழைத்து சென்றதற்காகவே ஈரம் காயாத சீனுராமசாமிக்கு நன்றிகள்.

Seenu Ramasamy

அதேபோல், பண்ணைபுரத்தை சாதாரண ஊரா நினைச்சிடாதீங்க இசைஞானி இளையராஜா பிறந்த ஊர், அப்பன் தோத்த ஊர்ல புள்ளைங்க ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம், என் குடும்பம் வாழுறதுக்கு காசு மட்டும் பத்தாது கொஞ்சம் புண்ணியமும் வேணும் ஆகிய வசனங்களில் சீனு ராமசாமி பளிச்சிடுகிறார்.

சீனுராமசாமியின் பலமே அவரது எமோஷனல் காட்சியமைப்புகள். அவரது எந்தப் படத்தை எடுத்துக்கொண்டாலும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் நம் மனதிலிருந்து அந்தக் காட்சிகள் விலகாது.

மாமனிதனைப் பொறுத்தவரை; ஒரு இந்து கிடைக்க வேண்டுமென்பதற்காக இந்து குடும்பத்துக்காக இந்துக்களின் புண்ணிய பூமியான காசியில் இஸ்லாமியர் தொழுகை செய்யும் காட்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. 

Maamanithan

சகிப்புத்தன்மை குறைந்து மற்ற மதத்தினரை விரோதியாக காண்பிக்கும் தற்கால இந்திய அரசியலில் சீனுராமசாமி அப்படி ஒரு காட்சியை வைத்தது முக்கியத்துவமான ஒன்று.

அதேபோல், தன்னை ஏமாற்றிய ஒருவனை நீண்ட நாள்கள் கழித்து பார்க்கும்போது அவனை மன்னித்துவிடுவது என்று சில காட்சிகளைத் தவிர்த்து வேறு எதுவும் பெரிதாக மனதிலும் ஒட்டவில்லை, நினைவிலும் ஓடவில்லை.

படத்துக்கு இசைஞானியும், யுவனும் சேர்ந்து இசையமைத்திருக்கிறார்கள். சில காட்சிகளின் பின்னணி இசையைத் தவிர்த்து வேறு எதுவும் பெரிதாக இல்லை. பாடல்களைப் பொறுத்தவரை நெனச்சது ஒன்னு கிடைச்சது ஒன்னு பாடல் மட்டும்தான் தேறும் ரகம். ஆனால் அதையும் பாதியில் காட்சிப்படுத்த மறந்துவிட்டார்களோ என்றே தோன்றுகிறது.

எப்போதும் இந்த உலகம் ஏமாற்றியவனை விட்டுவிட்டு ஏமாற்றம் அடைந்தவனை சுற்றி நின்று கொல்லும். அது உண்மைதான். ஏமாற்றம் அடைந்தவனுக்கு குற்ற உணர்ச்சி வரத்தான் செய்யும். அதற்காக தனது மனைவியையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டு தூரமாக செல்வது தனி மனிதனுக்கு ஞாயப்படலாம். ஆனால் ஒரு குடும்ப தலைவன் அப்படி செய்வது நெருடலையே ஏற்படுத்தும். 

Maamanithan

எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதை சீனுராமசாமி சொல்ல முற்பட்டிருக்கிறார். பாராட்டுக்கள். ஆனால், ஒருவனை நம்பி இருக்கும் மூன்று உயிர்கள் அவனால்தான் ஊருக்குள் அனைவராலும் ஒதுக்கப்படுகிறார்கள். எனில், ஊருக்குள் ஒரு நல்லவர்கூடவா இல்லை? ஒரு நல்லவர்கூட இல்லாத ஊருக்குள் தோன்றிய நல்லவனின் பின்புலம் என்ன? கேரளாவிலிருந்து காசி செல்வதற்கு எந்த விஷயம் ஹீரோவை உந்தியது? காசி என்றாலே கஞ்சாதானா? ஒரு பிரச்னை என்றால் ஒரு எளியவன், நல்லவன் ஓடித்தான் ஒளிய வேண்டுமா? 

மேலும் படிக்க | ‘வாரிசு’ படத்தில் நடிகர் விஜய் ஓட்டும் பைக்கின் விலை இத்தனை லட்சமா!

ஒருவனின் பணமும், ஒருவர் செய்யும் புண்ணியமும் ஒரு குடும்பம் வாழ்வதற்கு போதுமா? நிம்மதியும், ஒரு மாபெரும் துணையும் வேண்டாமா? என பல கேள்விகள் எழுகின்றன. 

இருந்தாலும் இந்த கேள்விகளை ஒதுக்கிவைத்துவிட்டு பார்த்தால் மனிதர்கள் சுருங்கி போன இந்த உலகத்திலும் மாமனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியதற்கு சீனுராமசாமிக்கு வாழ்த்துகள்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News