நடிகர் விஜய் மீதான வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டிய வழக்கில் நடிகர் விஜய் மீதான வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.  

Written by - RK Spark | Last Updated : Jul 15, 2022, 11:22 AM IST
  • விஜய் மீதான வழக்கு உயர்நீதிமன்றத்தில் முடித்து வைப்பு.
  • 2019க்கு முன்பு வரி செலுத்தி இருந்தால் அபராதம் விதிக்க கூடாது.
  • வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் கார்களுக்கு வரி கட்டாயம்.
நடிகர் விஜய் மீதான வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்! title=

வெளிநாட்டில் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் நீதிமன்றத்தை நாடி இருந்தார்.  இந்த வழக்கு பல நாட்களாக நடந்து வந்த நிலையில், 2019 ஜனவரிக்கு முன் காருக்கு முழு நுழைவு வரி செலுத்தியிருந்தால் நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கக் கூடாது என கூறி நடிகர் விஜய் மீதான வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.  சொகுசு கார் விவகாரத்தில் அபராதத்தை ரத்து செய்யக்கோரிய நடிகர் விஜய் மனு மீது இன்று தீர்ப்பளித்து உள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

vijay

மேலும் படிக்க | நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்க வேண்டும்: தமிழக அரசு!

மேலும், 2019 ஜனவரிக்கு பின்னும் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் என வணிக வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.  இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு நுழைவு வரி செலுத்த வேண்டியது கட்டாயம் எனவும் வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  நுழைவு வரியை ரத்து செய்யக் கோரி இசையமைப்பாளர் ஹாரீஷ் ஜெயராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளையும் முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு நுழைவு வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக 2019 ஜனவரியில் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு 2019 ஆம் ஆண்டுக்கு பின்னும் முழு நுழைவு வரி செலுத்தி இருக்காவிட்டால், நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கலாம்  என வணிக வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நடிகர் விஜய், கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உத்தரவு பிறப்பித்த பின், விஜய் தரப்பில் 7 லட்சத்து 98 ஆயிரத்து 075 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக  30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்த வேண்டுமென 2021 டிசம்பர் 17ல் வணிக வரித்துறை உத்தரவிட்டது.  இந்த உத்தரவை எதிர்த்து விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இதே கோரிக்கையுடன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், அடையார் கேட் ஹோட்டல் சார்பிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.  இந்த மூன்று வழக்குகளையும் நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்தார். ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அடையார் கேட் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2008ம் ஆண்டு கார் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் வரி செலுத்தக்கோரி 2021ம் ஆண்டு தான்  நோட்டீஸ் அளித்ததால் அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டுமென வாதிப்பட்டது.

Highcourt

நடிகர் விஜய் தரப்பு வழக்கறிஞர், கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2 சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டுமெனவும் ஆனால் தனக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  நடிகர் விஜய் வழக்கில் பதிலளித்த வணிக வரித்துறை, நுழைவு வரியை செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் 2019ல் உத்தரவு பிறப்பித்த பிறகும், குறித்த காலத்தில் நுழைவு வரி செலுத்தாததால், 2005 டிசம்பர் முதல், 2021 செப்டம்பர் வரையிலான 189 மாதங்களுக்கு நுழைவு வரியில் 2 சதவீதம் அபராத வட்டியாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்தும்படி உத்தரவிட்டதாகவும், சட்டத்தில் அதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரை வேறொரு நபருக்கு விற்று விட்டதாக நடிகர் விஜய்  கூறினாலும், இறக்குமதி செய்த அவர் நுழைவு வரி செலுத்தியாக வேண்டும் எனவும், ஆவணங்களை தாக்கல் செய்ய நோட்டீஸ் கொடுத்து, போதிய அவகாசம் வழங்கிய போதும், எந்த பதிலும் இல்லாததால் வட்டார போக்குவரத்து அலுவலக ஆவணங்களைப் பெற்று நுழைவு வரியை கணக்கிட்டதாகவும் வாதிடப்பட்டது.  அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுரேஷ்குமார், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு நுழைவு வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக கடந்த 2019 ஜனவரியில் மாதம்  உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது. 

எனவே, நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்கு முன்னர் முழு நுழைவு வரியை செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது எனவும்,   2019 ஜனவரிக்கு பின்னரும் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் எனவும்  வணிக வரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல், இறக்குமதி செய்த கார்களுக்கு நுழைவு வரி செலுத்த வேண்டியது கட்டாயம் என ஹாரீஸ் ஜெயராஜ் மற்றும் அடையார் கேட் தொடர்ந்த வழக்குகளில் உத்தரவிட்ட நீதிபதி, இந்த மூன்று வழக்குகளையும் முடித்து வைத்தார்.

மேலும் படிக்க | அஞ்சான் பார்ட் 2-வா 'தி வாரியர்'? திரைவிமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News