வருமான வரி துறை விசாரணைக்குப் பின்னர் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார்.
பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனையை தொடங்கியது. அதேபோல், படம் தயாரிக்க கடன் கொடுத்த பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெறுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் தமிழகத்தில் நடிகர், தயாரிப்பாளர், கடன் அளித்தவர்கள், பைனான்சியர்கள், விநியோகஸ்தர்கள் என அவர்களுக்கு சொந்தமான 38 இடங்கல் என பல பகுதிகளில் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் இதுவரை கிடைத்த ரொக்க பணம் மற்றும் ஆவணங்கள் வைத்து பார்த்தால் ரூ.300 கோடி வரை வரிஏய்ப்பு நடந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தனது அறிக்கையில் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யிடம் நேற்று முன்தினம் விசாரணையை தொடங்கினர் வருமான வரித்துறையினர். பின்னர் அங்கிருந்து அவரது காரிலேயே சென்னை அழைத்து வந்து, இரவு முழுவதும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். நேற்றும் சோதனை தொடர்ந்து நடைபெற்றது. இந்த சோதனை நேற்று இரவு நிறைவு பெற்றது.
இந்நிலையில், சோதனை நிறைவு பெற்றதையடுத்து நடிகர் விஜய் மீண்டும் தனது மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்.