நடிகர் சங்கத்துக்கு 2019ல் நடந்த தேர்தல் செல்லும்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ல் நடந்த தேர்தல் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 23, 2022, 12:23 PM IST
  • தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2019ல் நடந்த தேர்தல் செல்லும்: நீதிமன்றம்
  • 2019 ஜூன் 23 ல் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை 4 வாரங்களில் எண்ணி முடிவு அறிவிக்க தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு.
  • வாக்குப் பெட்டியை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவு.
நடிகர் சங்கத்துக்கு 2019ல் நடந்த தேர்தல் செல்லும்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு title=

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ல் நடந்த தேர்தல் செல்லும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கனவே பதிவான வாக்குகளை எண்ணி நான்கு வாரங்களில் முடிவை அறிவிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018 ம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிகாலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

பதவிக்காலம் முடிந்த செயற்குழு மூலம், ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தலை அறிவித்துள்ளது சட்டவிரோதமானது என்றும், சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டுள்ளதால், முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் நடிகர் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கம்  செய்யப்பட்டதை எதிர்த்து 61 உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்க மாவட்ட சங்கங்களின்  பதிவாளர் உத்தரவிட்டார். 

இந்த உத்தரவை எதிர்த்தும், தேர்தலை நடத்த பாதுகாப்பு கோரியும் பொதுச் செயலாளர் என்ற முறையில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்குகளில் பதிவாளர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், தேர்தலை நடத்தவும் அனுமதித்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கையை நடத்த கூடாது எனவும் உத்தரவிட்டது.

அதன்படி, திட்டமிட்ட தேதியான ஜூன் 23ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, வாக்கு எண்ணிக்கை நடத்தப்படாமல், வாக்குப்பெட்டிகள் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன. 

இதற்கிடையில், ஜூன் 23ல் நடத்தப்பட்ட தேர்தலில் வாக்குரிமை மறுக்கப்பட்டதாக கூறியும், நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக் கோரியும் சங்க  உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமின்  ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

மேலும் படிக்க | முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றொரு வழக்கிலும் கைது 

அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரித்த தனி நீதிபதி கல்யாணசுந்தரம், பதவிக்காலம் முடிந்த பிறகு தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டதும், அவர் மூலம் அறிவிக்கபட்டு, நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது எனவும் கூறி தேர்தலை ரத்து செய்து 2020 ஜனவரி 24ம் தேதி தீர்ப்பளித்தார். சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாசை தேர்தல் அதிகாரியாக நியமித்த உயர் நீதிமன்றம், புதிய வாக்காளர் பட்டியலை தயாரித்து, மூன்று மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டார். மீண்டும் தேர்தல் நடைபெற்று முடியும் வரை சங்க நிர்வாகத்தை அரசு நியமித்த தனி அதிகாரி தொடர்ந்த கவனிக்க உத்தரவிட்டு நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து விஷால், நாசர், கார்த்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 

இந்த மேல்முறையீடு வழக்குகள், மூன்று அமர்வுகளை கடந்து இறுதியாக, நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, முகமது ஷபீக் அமர்வு விசாரித்து, 2021 அக்டோபர் 26 ம் தேதி, வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் செல்லும் எனக் கூறி தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

சிறப்பு அதிகாரி பதவிகாலம் ஏற்கனவே முடிந்துவிட்டதால், அவரது நியமனத்தை எதிர்த்த வழக்குகளில் எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், கடந்த 2019ல் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டியை, தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவிட்டனர்.

அதன்பின், வாக்கு எண்ணிக்கையை நடத்த தேதியை முடிவு செய்து, வாக்குகளை எண்ணி, நான்கு வாரங்களில் முடிவுகளை அறிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 மேல்முறையீடு செல்ல இருப்பதால் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்திவைக்க வேண்டுமென நடிகர்கள் பெஞ்சமின், ஏழுமலை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், மூன்று வாரங்களுக்கு தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம் எனவும் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க | ஹாட் பாக்ஸ், கொலுசு, சிசிடிவி, பணம் இதுதான் திராவிட மாடல் வெற்றியா? அண்ணாமலை கேள்வி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News