தலைவி எப்படி இருக்கிறது; வெளியானது விமர்சனம்!

தலைவி படம் செப்டம்பர் 10 நாளை வெளியாக இருக்கும் நிலையில், படத்தைப் பார்த்த செய்தியாளர் ஆனந்தகுமார் படம் குறித்து எழுதியுள்ளார்.

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Sep 10, 2021, 10:42 AM IST
தலைவி எப்படி இருக்கிறது; வெளியானது விமர்சனம்! title=

சர்ச்சைகளே இல்லாமல், யாருக்கும் வலிக்காமல் ஒரு அரசியல் திரைப்படம் எடுக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர் விஜய். ஆம். இன்று வெளியாகியிருக்கும் தலைவி திரைப்படத்தைப் பார்த்தால் திமுகவினர் கூட சண்டைக்குப் போக மாட்டார்கள். அப்படி ஒரு அமைதியான படம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் (Jayalalithaa) வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம் தலைவி (Thalaivii). ஜெயலலிதா பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு திரைத்துறை நோக்கி வந்ததில் தொடங்கி, அரசியலில் நுழைந்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்வது வரை அவர் கடந்து வந்த பாதையைப் பேசுகிறது தலைவி.

ALSO READ | Kollywood: எம்ஜிஆராக நடிக்கும் நடிகர் அரவிந்த்சாமியின் பிறந்தநாள் கலக்கல் போஸ்டர்

எந்த ஒரு படமாக இருந்தாலும் அது முழுமையான விஷயங்களைப் பேச வேண்டும். குறிப்பாக வரலாற்றுத் திரைப்படங்களில் கதைகளைத் திரிப்பது எந்த அளவுக்கு அபத்தமானதோ, அதே அளவுக்கு அந்த வரலாற்றில் பல பக்கங்களை இருட்டடிப்பு செய்வதும் அபத்தமானதுதான். அதைத்தான் விஜய் தலைவி திரைப்படத்தில் செய்திருக்கிறார்.

சிறிய வயதில் தந்தையை இழந்த ஜெயலலிதா கடுமையான நிதி நெருக்கடியால் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு திரைத்துறைக்குள் நுழைகிறார்., பின்னர் எம்.ஜி.ஆறுடன் நெருக்கமான நட்பு, அதன்பின் அரசியல், அதில் பலரின் சூழ்ச்சிகளையும் வெற்றிகொண்டு முதல்வர் பதவியை அடைதல். இவை அனைத்தையும் (இவற்றை மட்டும்) மிக அழகாகத் தெளிந்த நீரோட்டம் போலக் காட்சிப்படுத்தியிருக்கிறார் விஜய். 

வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை எந்த அளவுக்கு ஒரு டிராமாவாக மாற்ற முடியும் என்பதற்குத் தலைவி ஒரு எடுத்துக் காட்டு. ஒரு வில்லன் கதாபாத்திரம் தேவை என்பதற்காக ஆர்.எம்.வீரப்பனை வில்லனாகக் காட்டியது, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா பேசும் வசனங்கள், ஆங்காங்கே ஜெயலலிதா பேசும் பஞ்ச் வசனங்கள், மற்றும் மிக முக்கியமாக அந்த கிளைமேக்ஸ் காட்சி அனைத்துமே ஜெயலலிதாவின் வாழ்க்கை என்ற ஒற்றை வரியின் மீது கட்டி எழுப்பப்பட்ட அழகான பிம்பங்கள்.

தலைவி படத்தின் நெகட்டிவ் பாயிண்ட்களை எல்லாம் மறக்கச் செய்வது கதாபாத்திர தேர்வு, விஷால் விடலின் அழகான கிளாஸிக் ஒளிப்பதிவு, மற்றும் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை. எம்.ஜி.அராக அரவிந்த் சாமியும், கருணாநிதியாக நாசரும் கச்சிதமாகப் பொருந்துகிறார்கள். ஆர்.எம்.வீரப்பனாக சமுத்திரக்கனியின் நடிப்பு மற்ற கதாபாத்திரங்களைத் தூக்கிச் சாப்பிடுகிறது. ஆனால் இவற்றுக்குக் கரும்புள்ளி வைப்பது போலச் சிவாஜி கணேசன் கதாபாத்திரத்துக்கு ஏனோ ஒரு பொருந்தாத நபரை தேர்வு செய்திருக்கிறார்கள்.

இத்தனையும் பேசிவிட்டு தலைவியாகவே வாழ்ந்த கங்கனா பற்றிப் பேசாமல் விடுவோமா! 16 வயது ஜெயலலிதாவுக்காக ஒல்லியான உடல் தேகம், 40 வயதில் கொஞ்சம் பருமனான உடல், அரசியலுக்குள் நுழைந்தவுடன் வித்தியாசமான சிகை என ஜெயலலிதாவைக் கிட்டத்தட்ட நெருங்கி வந்திருக்கிறார். ஜெயலலிதாவின் திரைப்படப் பாடல்களை அதே காஸ்டியூம் போட்டு கங்கனா மறுபதிப்பு செய்ததையும் ரசிக்க முடிந்தது. ஆனால் சாவித்திரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் பொருந்திய அளவுக்கு கங்கனா ஜெயா கதாபாத்திற்கு பொருந்தவில்லை என திரையரங்கத்தில் சிலர் பேசியதையும் கேட்க முடிந்தது.

மொத்தத்தில் ஒரு அழகான காதல் கதையை, ஒரு பெண்ணின் எழுச்சியை, அரசியலில் பெண்ணுக்கு ஏற்பட்ட தடைகளைக் கடந்து அவர் வென்ற கதையைப் பேசிய வகையில் தலைவியை ரசிக்கலாம். ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம், பின்னர் அவர் சிறை சென்ற காலம், இறுதிக்கால அப்பலோ மருத்துவமனை காட்சிகள் எல்லாம் இரண்டாம் பாகத்தில் வருமா என இயக்குநர் விஜய்தான் பதில் சொல்ல வேண்டும்.

(Authored By: Anandakumar M)

ALSO READ | MGR-ஆக அரவிந்த் சுவாமி.. ஜெயலலிதாவாக கங்கனா..

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News