கொரோனாத் தொற்று உச்சத்தில் இருந்த காலம். மருத்துவத்துறையைத் தவிர கிட்டத்தட்ட அனைத்துத் துறையும் முடங்கிய காலம். இதில், சினிமாத் துறை மட்டும் விதிவிலக்கா என்ன ?!. கடந்த 2020ம் ஆண்டு ஊரடங்கு, மரணங்கள், நோய்த் தொற்று என அச்சங்கள் நிறைந்த காலகட்டம். கொரோனாத் தொற்றுக் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில் திரைப்பட உலகில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்தது. அந்த சமயத்தில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவான ’சூரரைப் போற்று’ திரைப்படம் தியேட்டர் ரிலீஸுக்கு தயார் நிலையில் இருந்தது.
மேலும் படிக்க | ரொம்ப பெருமையா இருக்கு - விருதுகளை அள்ளிய சூரறைப் போற்றுக்கு தனுஷ் வாழ்த்து
நடிகர் சூர்யா, கதாநாயகியாக அபர்ணா முரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட நடிகர் பட்டாளம் நிறைந்த திரைப்படம். சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படம் ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அவரது சுயசரிதையை மையமாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்ட போதே சர்ச்சைகள் வெடித்தன. படத்தில் காட்டப்பட்டதற்கும், சுயசரிதை புத்தகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒருதரப்பு புகாரை முன்வைத்தது.
கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர் ரிலீஸிலும் பல்வேறு பிரச்சனை வெடித்தது. நடிகை ஜோதிகாவின் திரைப்படமான ‘பொன் மகள் வந்தாள்’ படத்தை சூர்யா ஓடிடி தளத்தில் வெளியிடப்போவதாக அறிவித்தார். உடனடியாக, திரையரங்க உரிமையாளர்களிடம் இருந்து பகிரங்கமான எதிர்ப்புக் கிளம்பியது. ஆனாலும், விடாப்படியாக துணிந்து ஓடிடியில் அந்தப் படத்தை வெளியிட்டார் சூர்யா. இதையடுத்து, தனது படமான சூரரைப் போற்று திரைப்படத்தை தியேட்டர் ரிலீஸிற்கு அனுமதிக்க மாட்டோம் என்று திரையரங்க உரிமையாளர்கள் பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தினர்.
அந்த நேரத்தில் தியேட்டர் ரிலீஸிற்கு தயாராக இருந்த சூரரைப் போற்று திரைப்படம் மே 1ம் தேதி வெளியாக இருந்தது. இந்தப் பிரச்சனையால் தள்ளிப்போனது. பின்னர், அக்டோபர் 30ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கின் உச்சக்கட்ட சமயத்தில் இந்தப் படம் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்தது. பின்னர் அக்டோபர் 30ம் தேதி அன்று அமேசான் ப்ரைமில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்தது.
ரிலீஸுக்கான நாள் நெருங்க நெருங்க மற்றொரு தடையும் சூரரைப் போற்று திரைப்படத்திற்கு வந்தது. அதாவது, இந்திய விமானப்படை குறித்த காட்சிகள் அதிகளவில் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதால் அதற்கு முறையாக இந்திய விமானப்படை, இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
ஆனால், அந்த நேரத்தில் இன்னும் இந்தப் படத்தை இந்திய விமானப்படை பார்க்காமல் இருந்ததால் படம் ரிலீஸாகுமா ? ஆகாதா ? என்ற குழப்பத்தில் இருந்தனர் படக்குழுவினர். பின்னர் பிரச்சனைகள் பேச்சுவார்த்தைகளின் மூலம் கடந்தன. பல தடைகளைக் கடந்து ஒருவழியாக அமேசான் ப்ரைமில் சூரரைப் போற்று திரைப்படம் வெளியாகி, ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது.
சூர்யாவின் அதகளமான நடிப்பும், அட்டகாசமான திரைக்கதையும் வெகுவாக அப்போது சிலாகிக்கப்பட்டன. ‘ப்ளைட்ட நீ தாம்பரத்துல இறக்குடா. நா பாத்துக்குறன்’ என்ற சூர்யாவின் வசனம் பட்டிதொட்டியெல்லாம் உச்சரிக்கப்பட்டன. மீம் கியேட்டர்களும் இந்த வசனத்தை ஒரு டெம்ப்ளேட்டாகவே பயன்படுத்தி வந்தனர். இரண்டு ஆண்டுகள் ஓடின. தற்போது சூரரைப் போற்று, ஐந்து தேசிய விருதுகளை தட்டிச்சென்றுள்ளது.
மேலும் படிக்க | வெற்றிமாறனின் விடுதலை படத்தில் நடந்த புதிய மாற்றம்!
இப்படத்தின் பிரபல வசனமான ‘ஜெயிச்சிட்ட மாறா’ என்ற வசனத்தை சினிமா ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், நாளை நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் என்பதால் மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு இது என்றும் அவரது ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். தடைகளைக் கடந்து சாதனைகளைக் குவித்த சூரரைப் போற்று திரைப்படக்குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.! ஜெயிச்சீட்டீங்க ‘சூரரைப் போற்று’!!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ