இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் ஜெய்பீம். பழங்குடி சமூக மக்களின் துயரங்களை வெளிப்படுத்தும் விதமான திரைக்கதையில் அமைந்த இப்படம், திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இப்படம் ஒருபுறம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், மறுபுறம் சில தரப்பிடமிருந்து படத்துக்கு எதிர்ப்புக் குரலும் எழுந்தது. குறிப்பாக, படத்தில் வில்லன் கதாபாத்திரத்தைக் காட்டும்போது, அவரின் பின்ணணியில் காலண்டரில் வன்னியர்களின் அடையாளமாகக் கூறப்படும் அக்னிக் கலசம் காட்டப்பட்டதாகவும், இது திட்டமிட்டுச் செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
மேலும் படிக்க | சூர்யா வெர்ஷன் 3.0: சரிவைச் சரிசெய்துகொண்டது எப்படி?
அதேபோல, வில்லன் கதாபாத்திரத்துக்கு வைக்கப்பட்டிருந்த ‘குருமூர்த்தி’ எனும் பெயர், மறைந்த வன்னியர் சங்கத் தலைவரான காடுவெட்டி குருவை மறைமுகமாகக் குறிப்பிடுவதுபோல அமைந்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. வன்னியர்களின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்த, வன்னியர் சங்கம், 5 கோடி ரூபாய் அபராதம் வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.
இன்னொருபுறம், பாமக தரப்பில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அடுக்கடுக்கான 9 கேள்விகளுடன் சூர்யாவுக்குக் கடிதம் எழுதி, பரபரப்புக் கிளப்பினார்.
சூர்யா தனது தவறுகளை ஒப்புக்கொள்ளாதது வருத்தமளிப்பதாகக் கூறிய அன்புமணி, இந்தப் படத்தில் வன்மத்தைக் காட்டினால், சூர்யாவின் அடுத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும்போது சிலரால் பிரச்சினையைச் சந்திக்கக்கூடும் என்ற தொனியில் குறிப்பிட்டிருந்தார். ஜெய்பீமிலிருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் மாற்றியமைக்கப்பட்ட நிலையிலும் நடிகர் சூர்யா மன்னிப்பு ஏதும் கேட்கவில்லை. அதே நேரம் இயக்குநர் த.செ.ஞானவேல் மட்டும் இந்த விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். பின்னர் ஒருவழியாக இப்பிரச்சனை ஓய்ந்திருந்தது.
இந்த நிலையில்தான், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் தொடர்பாக அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது. ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யா பொதுமன்னிப்பு கேட்காதவரை படத்தை ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தைத் திரையிடக் கூடாது என திரையரங்க உரிமையாளர்கள் மிரட்டப்பட்டு வருவதாகக் கூறியுள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மிரட்டலுக்குக் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கலாம் எனும் சூழல் உருவாகியுள்ளதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெய்பீம் விவகாரத்தில் சூர்யா மன்னிப்பு கேட்பாரா அல்லது முன்புபோலவே இம்முறையும் கண்டுகொள்ளாது கடந்துசெல்வாரா என இனிமேல்தான் தெரியவரும்.
மேலும் படிக்க | எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிட வேண்டாம்! பாமக வேண்டுகோள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR