2-ஜி வழக்கு சூப்பர் ஹிட், இந்தியாவே சிறந்தது: நடிகர் சித்தார்த்!

2-ஜி வழக்கில் அனைவரும் விடுதலையானதைத் தொடர்ந்து, நடிகர் சித்தார்த் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தையும் தனது ட்விட்டர் பகுதியிலிருந்து  நீக்கியுள்ளார். 

Last Updated : Dec 21, 2017, 01:20 PM IST
2-ஜி வழக்கு சூப்பர் ஹிட், இந்தியாவே சிறந்தது: நடிகர் சித்தார்த்! title=

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சி.பி.ஐ தவறிவிட்டதால் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுவிப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார். 

கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த இந்த வழக்கு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் தி.மு.க-வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளர்.

இதையடுத்து, 2-ஜி வழக்கில் அனைவரும் விடுதலையானதைத் தொடர்ந்து, நடிகர் சித்தார்த் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தையும் தனது ட்விட்டர் பகுதியிலிருந்து  நீக்கியுள்ளார். ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் சம்பந்தப்பட்ட '2-ஜி வழக்கு' தீர்ப்பு இந்தியாவில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. அந்த தீர்ப்பு இன்று (டிசம்பர் 21) காலை 11:00 மணிக்கு தீர்ப்பு வெளியாவதாக இருந்தது.

தீர்ப்பு வருவதற்கு முன்னதாக நடிகர் சித்தார்த்: ராஜா, கனிமொழி நடிப்பிலான திருட்டுப்பயலே-1 படத்துக்கான விமர்சனம் இன்று வெளியாகிறது. ஜெயலலிதா, சசிகலா மற்றும் பலரின் நடிப்பிலான திருட்டுப்பயலே-2 போலவே இந்த படத்துக்கான தீர்ப்பும் நன்றாகவே இருக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்திருந்தார். 

ஆனால்,  2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை என்று தீர்ப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து தனது சர்ச்சைக்குரிய ட்வீட்டை தனது பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார். 

தீர்ப்பு வெளியானதையடுத்து, சூப்பர் ஹிட் என்ற செய்தி வந்துள்ளது. அனைவருக்கும் விடுதலை. என் இந்தியாவே சிறந்தது. இந்திய அரசியலின் தூய்மையான குற்றமற்ற தன்மைக்கு என் வாழ்த்துகள் என்று நக்கலாக பதிவிட்டுள்ளார். எவ்வளவு நற்குணம். இனி 2-ஜி கிடையாது. தேசிய கீதம் ஒலிக்கிறது. எழுந்து நில்லுங்கள் என்று தனது ட்விட்டர் பகுதியில் சித்தார்த் பதிவிட்டுள்ளார். 

 

 

Trending News