தோள்பட்டை காயம் காரணமாக பிரஞ்ச் ஓபன் போட்டியில் இருந்து மரியா ஷரபோவா விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் வரும் மே 26 துவங்கி ஜூன் 9 வரை நடைபெறுகிது. இத்தொடரில் இருந்து முன்னாள் சாம்பியனான ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் மெல்பெர்னில் நடைப்பெற்ற ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் 4-வது சுற்று வரை சென்ற ஷரபோவா, ரஷ்யாவில் நடைப்பெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபனில் வலது கை தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் சுற்றோடு விலகினார்.
இத்தொடரில் ஏற்பட்ட காயம் முழுவதுமாக குணமடையாத காரணத்தினால், பிரஞ்ச் ஓபன் தொடரில் இருந்து தற்போது விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். இரண்டு முறை (2012 மற்றும் 2014) பிரஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஷரபோவாவின் வெற்றிடம் இத்தொடரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக ஷரபோவா தெரிவிக்கையில்., "பிரஞ்ச் ஓபன் தொடரில் இருந்து விலகியது சரியான முடிவு என்றாலும் கடினமான ஒன்று. தற்போது பயிற்ச்சியில் ஈடுப்பட்டு வருகிறேன், விரைவில் பூரண குணத்துடன் போட்டிக்கு திரும்புவேன்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.