இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் முதலாவது T-20 கிரிகெட் தொடர் டப்ளின் நகரில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் கேரி வில்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சார்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 97, தவான் 74 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், அயர்லாந்து அணியின் சார்பில் பால் ஸ்டிர்லிங் மற்றும் ஜேம்ஸ் ஷனோன் ஆகியோர் களமிறங்கினர்.
ஆனால், இந்திய பந்து வீச்சில் அயர்லாந்து அணி நிலை தடுமாறியது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 4, சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில், அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.