மொகாலி: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 283 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ராஜ்கோட்டில் நடந்த 1-வது டெஸ்ட் டிரா ஆனது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று தொடங்கியது.
டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் முதலில் பேடடிங்கை தேர்வு செய்தார். இதன்படி அலஸ்டயர் குக்கும், ஹசீப் ஹமீத்தும் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. டாஸ் வென்ற நிலையில் இங்கிலாந்து முழுமையாக பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டது.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது அடில் ரஷித் 4 ரன்களிலும், காரெத் பேட்டி ஒரு ரன்னிலும் அவுட் ஆனார்கள். ஆண்டர்சன் இறுதியில் 13 ரன்களுடன் களத்தில் நின்றார். இங்கிலாந்து அணி 93.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 283 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ மட்டும் அதிகப்பட்சமாக 89 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் முகமது சமி 3 விக்கெட்களையும், உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.