IND vs Eng: இங்கிலாந்தை வீழ்த்தி 317 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!

இந்தியா இங்கிலாந்து இடையில் நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 16, 2021, 03:30 PM IST
  • இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி.
  • இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
  • இந்தியா இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 24 முதல் அகமதாபாத்தில் நடைபெறும்.
IND vs Eng: இங்கிலாந்தை வீழ்த்தி 317 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!  title=

சென்னை: இந்தியா இங்கிலாந்து இடையில் நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. சென்னையில் நடந்த முதல் போட்டியில் 217 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை எதிர்கொண்ட பின்னர், இரண்டாவது டெஸ்டில் முதல் நாளிலிருந்தே இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.

ரோஹித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) தங்கள் அற்புதமான ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தனர். இந்தியாவின் முதல் இன்னிங்சில் ரோஹித் சர்மா 161 ரன்கள் எடுத்தார். இதனால் இந்தியா 329 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை எட்ட முடிந்தது. அஸ்வின் ஒரு அற்புதமான ஆல் ரௌண்ட் நாயகனாக பரிமளித்தார்.

சீனியர் ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் இங்கிலாந்தின் முதல் இன்னிங்சின் போது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் ஒரு அற்புதமான சதத்தை (148 பந்துகளில் 106) அடித்தார். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்துக்கு 482 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கு அளிக்கப்பட்டது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி ஆங்கில பேட்ஸ்மேன்களை ரன் எடுக்க விடாமல் செய்தனர். இதைத் தொடர்ந்து 164 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ALSO READ: IND vs Eng: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று துவக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான மிகப்பெரிய டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்த பின்னர், ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்திற்கு பின்னால் இப்போது இந்தியா உள்ளது. இந்தியா தற்போது 460 புள்ளிகளையும், 69.7 CPT புள்ளிகளையும் கொண்டுள்ளது. இங்கிலாந்து நான்காவது இடத்திற்கு சென்றுவிட்டது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்திற்குப் பிறகு இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணி, இந்த டெஸ்ட் தொடரில் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் குறைந்தது ஒரு போட்டியிலாவது வெல்ல வேண்டும். உலக டெஸ்ட் போட்டிகளின் இறுதிப் போட்டி இந்த ஆண்டின் பிற்பகுதியில் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

அஸ்வின் மற்றும் ரோஹித்சர்மாவைத் தவிர, அறிமுக வீரர் அக்சர் படேலும் தனது அறிமுக ஆட்டத்திலேயே நன்றாக பிரகாசித்தார். இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்சில் முதன் முறையாக ஐந்து விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான அவர், தனது 21 ஓவர்களில் 60 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு முறையும் அவர்தான் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா இங்கிலாந்து (IND vs Eng) இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 24 முதல் அகமதாபாத்தில் நடைபெறும். இந்த டெஸ்ட் தொடரில் மொத்தம் நான்கு போட்டிகள் விளையாடப்படும். மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகள் அகமதாபாதின் மொட்டேரா மைதானத்தில் நடைபெறுகின்றன.

ALSO READ: WATCH: சென்னை சேப்பாக்க மைதானத்தில் 'விசில் போடு' விராட் கோலியின் கொண்டாட்டம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News