தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 டி20, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக முதல் டி20 மழையின் காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 மொஹாலியில் இன்று நடைப்பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது.
#IndvsSA, 2nd T20I: India win by 7 wickets against South Africa.
— ANI (@ANI) September 18, 2019
இதனையடுத்து முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது. அணியில் அதிகப்பட்சமாக அணித்தலைவர் குவிண்டன் டி காக் 52(37) ரன்கள் குவித்தார், இவருக்கு துணையாக டெம்பா பாவுமா 49(43) ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் தீபக் ஷஹர் 3(19 ரன்கள்) விக்கட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 12(12) ரன்களுக்கு வெளியேற ஷிகர் தவானுடன் 40(31) ஜோடி சேர்ந்த விராட் கோலி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 72*(52) ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப் பன்ட் 4(5) ரன்களில் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, தப்ரேஜ் ஷம்ஸி மற்றும் பார்ட்டூன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டத்தின் 19-வது ஓவரில் 151 ரன்கள் குவித்து வெற்றி வாகை சூடிய இந்தியா அணி, நடப்பு தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி, வரும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வரும் செப்டம்பர் 22-ஆம் நாள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.