இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி, துவக்க வீரர் ஷிகர் தவான் மற்றும் புஜாரா ஆகியோரின் சதங்களுடன் 399 ரன்களுடன் பலமான நிலையில் உள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான இந்திய சுற்றுபயணத்தில் இந்திய 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. அதன் முதல் போட்டி இன்று காலேவில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து துவக்க வீரர்களாக முகுந்த், தவான் ஜோடி களமிறங்கியது. முகுந்த் 12 ரன்களில் வெளியேற, அடுத்ததாக களமிறங்கிய புஜாரா தவனுடன் இனைந்து இலங்கை பவுலர்களின் பந்துவீச்சை சிதறடித்தார்.
தவான் 190 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார், பின் வந்த கேப்டன் கோலி 3 ரன்களுடன் வெளியேறினார். பின் ரகானே மற்றும் புஜாரா தங்களது சிறப்பான ஆட்டத்தினை வெளிபடுத்தினார். புஜாரா டெஸ்ட் அரங்கில் தனது 12வது சதத்தை பூர்த்தி செய்தார். இதையடுத்து இன்றைய ஆட்டநேர முடிவில், இந்திய கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்சில், 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் எடுத்தது. புஜாரா (144), ரகானே (39) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணி, அந்நிய மண்ணில் பங்கேற்ற டெஸ்ட் போட்டிகளில் முதல் நாளில் அதிக ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளது. இதற்குமுன் 2008-09 ல் வெல்லிங்டனில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி, 9 விக்கெட்டுக்கு 375 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.