10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட் அணியிடம் மீண்டும் தோல்வியை சந்தித்தது.
வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இந்த போட்டியில் டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசியது.
சூப்பர்ஜயன்ட் தொடக்க வீரர்களாக அஜிங்க்யா ரகானே, ராகுல் திரிபாதி களமிறங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவரில் 76 ரன் சேர்த்தனர். ரகானே 38 ரன், திரிபாதி 45 ரன் (31 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கரண் ஷர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 17 ரன் எடுத்து ஹர்பஜன் சுழலில் கிளீன் போல்டானார். ஸ்டோக்ஸ் 17, டோனி 7, மனோஜ் திவாரி 22 ரன்னில் பெவிலியன் திரும்பினர். புனே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன் குவித்தது. அடுத்ததாக களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்து பரிதாபமாக தோல்வி அடைந்தது. ரோகித் ஷர்மா 58 ரன் (39 பந்து) எடுத்து ஆட்டமிழந்தார். உனாத்கட் வீசிய கடைசி ஓவரில் 17 ரன் தேவை என்ற நிலையில் மும்பை அணி, 2 சிக்சர் உட்பட 13 ரன் எடுத்தது. இந்த ஓவரில் ரோகித், ஹர்திக் பாண்டியா (13) ஆட்டமிழந்தது புனேவின் வெற்றிக்கு முக்கிய காரணமானது. தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்ற மும்பை அணி, முதல் லீக் போட்டியில் தோல்வி அடைந்த புனேவிடமே மீண்டும் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.