IPL 2024 Champions: 3ஆவது முறையாக சாம்பியனானது KKR... கம்பீரமாக வென்ற கம்பீர் படை!

IPL 2024 Champions KKR: 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மூன்றாவது முறையாக ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

Written by - Sudharsan G | Last Updated : May 26, 2024, 11:02 PM IST
  • இதற்கு முன் கேகேஆர், 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் கோப்பையை வென்றது.
  • அந்த இரண்டு முறையும் கௌதம் கம்பீர் கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்தார்.
  • இந்த சீசனில் கம்பீர் கேகேஆர் அணியின் ஆலோசகராக பொறுப்பேற்றார்.
IPL 2024 Champions: 3ஆவது முறையாக சாம்பியனானது KKR... கம்பீரமாக வென்ற கம்பீர் படை! title=

IPL 2024 Champions KKR: கடந்த இரண்டு மாதங்களாக மிகுந்த பரப்பரப்புடன் நடைபெற்று வந்த டி20 கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் சாம்பியனாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி வாகை சூடியது. இன்றைய இறுதிப்போட்டியில் பலமான ஹைதராபாத் அணியை 113 ரன்களுக்கு சுருட்டிய கேகேஆர், வெறும் 10.3 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியிருக்கிறது. கேகேஆர் தரப்பில் வெங்கடேஷ் ஐயர் வின்னிங் ஷாட் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.  

2012 மற்றும் 2014ஆம் ஆண்டில் கௌதம் கம்பீர் கேப்டன்ஸியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்ற நிலையில், தற்போது 10 ஆண்டுகள் கழித்து 2024ஆம் ஆண்டில் கோப்பையை முத்தமிட்டிருக்கிறது.

கம்பீரின் என்ட்ரியால் கிடைத்த கோப்பை...

கடந்தாண்டு லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த கௌதம் கம்பீர், இந்த சீசனில் அவர் கோப்பையை வென்று கொடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மீண்டும் வரவழைக்கப்பட்டார். கேகேஆர் அணியின் உரிமையாளரான ஷாருக் கான் அவரை மீண்டும் அணிக்கு வரவழைத்து முழு சுதந்திரம் கொடுத்ததன் விளைவாக இந்த முறை ஐபிஎல் கோப்பை அவர்களின் கைகளில் தவழ்ந்துள்ளது எனலாம்.

மேலும் படிக்க | ஐபிஎல் மெகா ஏலம்... ராஜஸ்தான் ராயல்ஸ் ரிலீஸ் செய்யப்போகும் 5 முக்கிய வீரர்கள்!

வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் 

அதேபோல் இந்த கோப்பையை வென்றதற்கு அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயருக்கும் மிகுந்த பங்கு இருக்கிறது. ஏற்கெனவே அவர் தலைமையில் 2020ஆம் ஆண்டில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதல்முறையாக கோப்பை கனவு நிறைவேறியுள்ளது. அதேபோல், மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா, கௌதம் கம்பீர், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு பிறகு ஷ்ரேயாஸ் ஐயரும் கோப்பையை வென்ற இந்திய கேப்டன்கள் என்ற வரிசையில் இணைந்துள்ளார். 

சுனில் நரைன் - பில் சால்ட் ஆகியோரின் அதிரடி ஓப்பனிங்கே கேகேஆர் அணிக்கு இந்த கோப்பையை கைப்பற்ற உதவியிருக்கிறது. மிட்செல் ஸ்டார்க்கை மினி ஏலத்தில் சுமார் ரூ.24.75 கோடி கொடுத்து எடுத்த கொல்கத்தா அணிக்கு அவர் சிறப்பான பங்களிப்பை அளித்தார். குறிப்பாக, குவாலிஃபயர் 1 போட்டியிலும் சரி, இன்றைய இறுதிப்போட்டியிலும் சரி ஸ்டார்க்கின் முதல் ஓவர் தாக்குதல் பெரியளவில் உதவியிருக்கிறது.

கொண்டாட்டமும், கண்ணீரும்...

இன்றைய வெற்றிக்கு பின்னான கொண்டாட்டத்தில் கம்பீரை சுனில் நரைனும், சுனில் நரைனை கம்பீரும் தூக்கிக் கொண்டாடியது நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது. கம்பீர் முகம் முழுக்க புன்னகை நிறைந்து காணப்பட்டது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளித்தது. கேகேஆர் உரிமையாளர் ஷாருக் கான் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் ஆகியோர் கொண்டாடித் தீர்த்தனர்.  

மறுபுறம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டாலும் இன்றைய போட்டியில் மோசமான விளையாட்டை வெளிப்படுத்தியதால் தோல்வியை தழுவியது. தோல்விக்கு பின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கண்ணீர்விட்டு வருந்திய புகைப்படங்கள் வரும் நாள்களில் வைரலாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். இருப்பினும், கடந்தாண்டு 10ஆவது இடத்தில் முடித்த சன்ரைசர்ஸ் அணி, இம்முறை 2வது இடத்தை பிடித்துள்ளது பாராட்டத்தக்கது. அந்த அணியும் பாட் கம்மின்ஸை மினி ஏலத்தில் 20.5 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ஐபிஎல் மெகா ஏலம் 2025... 'இந்த' வீரர்களுக்கு தான் அதிக மவுசு இருக்கும் - ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News