ஷமி மட்டுமல்ல... ஆஸ்திரேலியாவுக்கு பறக்கும் 2 பவுலர்கள் - பலமாகுமா இந்தியா?

உலகக்கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய பும்ராவுக்கு மாற்று வீரராக தேர்வான முகமது ஷமி ஆஸ்திரேலியா சென்றார்.  

Written by - Sudharsan G | Last Updated : Oct 14, 2022, 07:19 PM IST
  • பேக்-அப் வீரர்களாக கூடுதலாக இரண்டு பேரும் ஆஸ்திரேலியா செல்கின்றனர்.
  • ஷமி கடந்த டி20 உலகக்கோப்பையின்போது இந்திய அணியில் விளையாடினார்.
  • அக். 17ஆம் தேதி ஆஸ்திரேலியா உடன் இந்தியா பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.
ஷமி மட்டுமல்ல... ஆஸ்திரேலியாவுக்கு பறக்கும் 2 பவுலர்கள் - பலமாகுமா இந்தியா? title=

எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்.16ஆம் தேதி தொடங்குகிறது. தொடர் முழுவதும் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள நிலையில், முதல் சுற்று வரும் அக். 16ஆம் தேதியில் இருந்து அக். 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து, சூப்பர் 12 சுற்று அக்.22ஆம் தேதி தொடங்குகிறது. நவ. 9, 10 தேதிகளில் அரையிறுதிப்போட்டிகள், நவ. 13ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது. 

சூப்பர்-12 சுற்றுக்கு போட்டிக்கு முன்பாக, பல்வேறு அணிகள் பயிற்சி ஆட்டங்களிலும் பங்கேற்கின்றன. மேலும், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடியதில்லை. எனவே, பயிற்சியை விரைவாகவே தொடங்க ரோஹித் சர்மா தலைமையிலான 14 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அக். 6ஆம் தேதியே ஆஸ்திரேலியா புறப்பட்டது. 

அதாவது, பயிற்சி ஆட்டங்களில் இரண்டு போட்டிகள் முன்னரே திட்டமிடப்பட்ட நிலையில், இந்திய அணி கூடுதல் பயிற்சிக்காக கேட்டுக்கொண்டதற்கு இணங்க மேற்கு ஆஸ்திரேலியா அணியுடன் இரண்டு பயிற்சி ஆட்டங்கள் திடீரென திட்டமிடப்பட்டது. அக். 10, 13ஆம் தேதிகளில் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகளையும் இந்தியா வென்றது. 

மேலும் படிக்க | ஷாகீன் அப்ரிடியை அசால்டாக அடிக்கலாம் ; காம்பீர் சொல்லும் அட்வைஸ்

தொடர்ந்து, அக். 17, 19ஆம் தேதிகளில் முறையே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. அந்த வகையில், இந்தியாவின் முக்கிய பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கான மாற்று வீரரை அறிவிப்பதில் இழுபறி நீடித்தது. 

உலகக்கோப்பை அணியின் காத்திருப்போர் பட்டியலில் வேகப்பந்துவீச்சாளர்களாக ஷமி மற்றும் தீபக் சஹார் ஆகியோர் இடம்பெற்றிருந்த நிலையிலும், இவர்களில் யாரை, டிராவிட் - ரோஹித் ஜோடி அணிக்குள் கொண்டுவர இருக்கிறார்கள் என கேள்வி நீடித்து வந்த நிலையில், பும்ராவுக்கான மாற்று வீரரை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. 

இந்தியாவின் அனுபவ பந்துவீச்சாளரான முகமது ஷமியை ஆஸ்திரேலியா சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் பயிற்சி ஆட்டங்களுக்கு முன்னதாக அவர் விரைவில் அணியுடன் இணைந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேக்-அப் வீரர்களாக முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் விரைவில் ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.. 

முகமது ஷமி, சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா உடனான டி20 போட்டிகளின்போது, இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால், கரோனா தொற்று பாதிப்பால் இரு தொடர்களில் இருந்தும் விலகினார். தொடர்ந்து, உடற்தகுதியை நீரூபித்த பின்னரே அவர் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். 

தற்போது, ஷமியுடன் சேர்த்து புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளனர். முகமது ஷமி 17 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில், 93 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஷமி கடைசியாக கடந்த டி20 உலகக்கோப்பையின்போது சர்வதேச டி20 போட்டியில் விளையாடி இருந்தார். அந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மாற்றப்பட்ட இந்திய ஸ்குவாட் 

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவிசந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.

காத்திருப்பு வீரர்கள்: முகமது சிராஜ், ஷ்ரேயஸ் ஐயர், ரவி பிஷ்னோய், ஷர்துல் தாக்கூர்.

மேலும் படிக்க | கோலிக்கு கங்குலி செய்த துரோகம்! கங்குலிக்கு ஏற்பட்ட அதே நிலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News