பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் ஆசாம், இந்திய கேப்டன் விராட் கோலி இன்று இருக்கும் இடத்தை அடைய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தன்னை கோலியின் ரசிகர் என்று வர்ணிக்கும் 24 வயதான பேட்ஸ்மேன் ஒரு நேர்காணலில் ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசையில் உலக நம்பர் 1 பேட்ஸ்மேனுடன் தன்னை பொருத்திக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "கோலி ஏற்கனவே நிறைய சாதித்துள்ளார், அவர் தனது நாட்டின் சிறந்த வீரர். என்னை அவருடன் நேர்மையாக ஒப்பிட முடியாது, ஆனால் அவர் இன்று இருக்கும் இடத்தை அடையவும் விரும்புகிறேன். ஒருநாள் அடைவேன் எனவும் நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், "ஊடகங்களும் மக்களும் என்னையும் கோலியையும் நிறைய ஒப்பிட்டுள்ளனர், ஆனால் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக இருக்க, டெஸ்டில் நிறைய ரன்கள் எடுக்க வேண்டும் என்ற உணர்வு எனக்கு உள்ளது. சமீபத்திய காலங்களில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது தொடர்ச்சியான நல்ல ஆட்டத்தை நான் கவனித்தேன்.
யாராவது என்னை கோலி அல்லது ஸ்டீவ் ஸ்மித்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நான் அந்த அழுத்தத்திற்கு வரவில்லை என தெரிவிக்க விரும்புகிறேன். நான் இப்போது எனது பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்துகிறேன், பல மணி நேரம் எனது பேட்டிங்கின் வீடியோக்களைப் பார்க்கிறேன். எனது தவறுகளை நான் அடையாளம் கண்டுகொண்டு, அது மீண்டும் மீண்டும் நிகழாது என்பதை உறுதிப்படுத்த முயற்சிக்கிறேன்." என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரிஸ்பேனில் நடந்த முதல் இன்னிங்சில் மோசமான ஷாட் விளையாடிய பிறகு நான் வெளியேறிய போது, என்மீது மிகுந்த கோபமடைந்தேன், அத்தருணத்தில் நான் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் இல்லை என்பதை உணர்ந்தேன். இதுபோன்ற தருணங்களை தவிர்க்க நான் மேலும் பயிற்சி எடுக்க வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தனது விருப்பங்களை பேசிய அவர்., "நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடிக்க விரும்புகிறேன். எல்லா சிறந்த வீரர்களையும் போலவே எனது இலக்குகளையும் நான் அமைக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட ஒரு இலக்கை நிர்ணயித்துள்ளேன்" என்று பாபர் அசாம் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான ராவல்பிண்டி டெஸ்டில் ஆட்டமிழக்காத சதம் அடித்தது, பாபர் ஆசாமின் கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் அடித்த இரண்டாவது சதமாகும். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பாபர் ஆசாம் 2 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 97 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.