ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்: சாய்னா நெவால் 2-வது முறை சாம்பியன்

Last Updated : Jun 13, 2016, 04:49 PM IST
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்: சாய்னா நெவால் 2-வது முறை சாம்பியன் title=

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சாய்னா நெவால் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் சீனாவின் சன் யுவை எதிர்த்து ஆடினார். 

இதில் 11-21, 21-14, 21-19 என்ற செட் கணக்கில் சீனாவின் சன் யூவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். இது அவர்  வெல்லும் 2-வது ஆஸ்திரேலியன் ஓபன் பாட்மிண்டன் பட்டமாகும். இதற்கு முன்னர் 2014-ம் ஆண்டு சாய்னா நெவால் இந்த பட்டத்தை வென்றுள்ளார். இந்த தொடரில் பட்டத்தை வென்றதன் மூலம், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் சாய்னாவின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. 

இதைக்குறித்து இந்திய பாட்மிண்டன் சங்க தலைவர் அகிலேஷ் தாஸ் குப்தா கூறும்போது:- ''அற்புதமான வெற்றியைப் பெற்றிருக்கும் சாய்னாவுக்கு வாழ்த்துகள். வருடைய விளையாட்டு வாழ்க்கையில் இது மற்றொரு மைல்கல். இந்த வெற்றி ஒலிம்பிக் போட்டியில் சாய்னா சிறப்பாக விளையாடுவதற்கான ஊக்கத்தைக் கொடுக்கும். இந்த நேரத்தில் சாய்னாவின் வெற்றிக்காக பாடுபட்ட அவருடைய பயிற்சியாளர் விமல் குமார் மற்றும் உதவி அலுவலர்களுக்கும் வாழ்த்துகள்" என்றார். மேலும் சாய்னா நெவாலுக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளதாக இந்திய பாட்மிண்டன் சங்கம் அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'இது ஒரு பிரமாண்ட வெற்றி. உங்களின் பிரமாண்டமான வெற்றிக்கு வாழ்த்துகள் சாய்னா. விளையாட்டுத் துறையில் உங்களின் சாதனையை நினைத்து ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது" என குறிப்பிட்டு உள்ளார்.

சச்சின் தெண்டுல்கர் ''ஆஸ்திரேலிய ஓப்பன் சாம்பியன் பட்டத்தை நீங்கள் 2வது முறையாக வென்றதன் மூலம், ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமையடைகிறது. ரியோவில் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள்" என்று தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டு உள்ளார்.

நடிகர் ஷாரூக்கான், ''சாய்னா மிகச் சிறந்த பெண். தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்முடைய நாடடிற்கு பெருமைகளை சேர்க்க வேண்டும்" என்று தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டு உள்ளார்.

 

 

 

 

Trending News