பார்வையற்றோருக்கான 2-வது டி-20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிசுற்றை எட்டின.
இந்நிலையில் இறுதி ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது.
இதில் ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 10.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 118 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பாதர் முனிர் 57 ரன்களும், முகமது ஜமில் 24 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் கேதன் பட்டேல், ஜாபர் இக்பால் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 17.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது.
வெற்றிக்கு வித்திட்ட இந்திய தொடக்க ஆட்டக்காரர் பிரகாஷ் ஜெயராமையா 99 ரன்களுடன் (60 பந்து, 15 பவுண்டரி) கடைசி வரை களத்தில் இருந்தார். அஜய்குமார் ரெட்டி 43 ரன்களில், ரன்-அவுட் ஆனார்.
பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட்டில், 3 வகையான பார்வை குறைபாடு உள்ள வீரர்கள் இடம் பெற்று இருப்பார்கள். ஆடும் லெவன் அணியில் குறைந்தது 4 பேர் முற்றிலும் பார்வை இல்லாதவர்கள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.