நாடு முழுவதும் விஜய் ஹசாரே தொடர் கடந்த நவ. 12ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல் தர போட்டியான இத்தொடர், ஒருநாள் போட்டி வடிவத்தில் நடைபெறும்.
இதில் மொத்தம், 40 அணிகள் விளையாடுகின்றன. இவை 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவில் தலா 8 அணிகள் இடம்பிடித்துள்ளது. இதில், ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் இருக்கும் அணியுடன் தலா 1 முறை மோதும். பின்னர், பின்னர் காலிறுதிக்கு முந்தைய சுற்று, காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டி என தொடர் வரும் டிசம்பர் 2ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
கடந்த 2002-03ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த தொடர், ரஞ்சி கோப்பையின் ஒருநாள் போட்டி வடிவம் என அறியப்படுகிறது. இந்த தொடரை தமிழ்நாடு அணி 5 முறை வென்றுள்ளது. மேலும், 2016க்கு பின் மீண்டும் சாம்பியனாக வேண்டும் என்ற முனைப்பில் தமிழ்நாடு அணி, நடப்பு தொடரை விளையாடி வருகிறது.
இந்த தொடரில், விளையாடிய 5 போட்டிகளில் தமிழ்நாடு அணி 4இல் வெற்றி பெற்றது. ஒரு போட்டி மழையால் ரத்தானது. இதில், கடைசியாக நடைபெற்ற நான்கு போட்டிகளிலும், தமிழ்நாட்டின் நாராயணன் ஜெகதீசன் தொடர்ச்சியாக நான்கு சதங்களை அடித்து மிரட்டியிருந்தார்.
மேலும் படிக்க | தேர்வாளர்களை தொடர்ந்து மற்றொரு முக்கிய புள்ளியை நீக்க பிசிசிஐ முடிவு!
#Jagadeesan (277) misses out on triple hundred. Gets a big ovation from teammates after world record List A score. @sportstarweb #VijayHazareTrophy2022 pic.twitter.com/s8CKYgUXsc
— Ashwin Achal (@AshwinAchal) November 21, 2022
507 ரன்கள் இலக்கு
இந்நிலையில், இன்று அருணாச்சல பிரதேச அணியுடன், தமிழ்நாடு அணி பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் தமிழ்நாடு அணிக்கு சாய் சுதர்சன் - நாராயணன் ஜெகதீசன் இணை தொடக்க வீரராக களமிறங்கியது.
இந்த இணை எதிரணியை பந்துவீச்சை தவிடுபொடியாக்கி ரன்களை குவித்துக்கொண்டே இருந்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டி நடைபெற்று வருகிறது. ஒப்பீட்டளவில் மற்ற மைதானங்களை விட இந்த மைதானம் சிறிது, பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் என்றாலும், ஒரே அடியாக ரன்களை குவிப்பது அசாதாரணமானது.
இருவரும் மாறி மாறி பவுண்டரிகளை விளாசி சதத்தை பதிவு செய்தனர். குறிப்பாக முரட்டு ஃபார்மில் இருக்கும் நாராயணன் ஜெகதீசன் வெறும் 141 பந்துகளில் 25 பவுண்டரிகள், 15 சிக்ஸர்கள் என 277 ரன்களை குவித்துள்ளார். மறுப்புறம் 102 பந்துகளில் 19 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 154 ரன்களை சாய் சுதர்சன் குவித்துள்ளார். இதன்மூலம், தமிழ்நாடு அணி மொத்தம் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 506 ரன்களை எடுத்துள்ளது.
மேலும் படிக்க | ஐபிஎல் 2023 சிஎஸ்கே பட்டியல்: ரவீந்திர ஜடேஜா தக்கவைப்பு டுவைன் பிராவோ விடுவிப்பு
Jaggi’s (Pancha)TONdhiram! #VijayHazareTrophy #WhistlePodu pic.twitter.com/K5W9z6PWPd
— Chennai Super Kings (@ChennaiIPL) November 21, 2022
மேலும், சாய் சுதர்சன் 39ஆவது ஓவரிலும், நாராயணன் ஜெகதீசன் 42ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். ஒருவேளை, அவர்கள் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால், ஸ்கோர் இன்னும் உயர்திருக்கலாம். மேலும், ஒருநாள் போட்டியில் 300 ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்திருப்பார். அது தவறிவிட்டது.
தனிநபர் சாதனை
இதன்மூலம், தொடர்ச்சியாக ஐந்து சதங்களை, முதல் தர போட்டிகளை அடித்து நாராயணன் ஜெகதீசன் உலக சாதனையை படைத்துள்ளார். குமார் சங்கக்காரா, தென்னாப்பிரிக்காவின் ஆல்விரோ பீட்டர்சன், கர்நாடகாவின் தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடர்ச்சியாக நான்கு சதங்களை அடித்திருந்தனர்.
மேலும், தனிநபராக ரோஹித் சர்மாவின் (சர்வேதச ஒருநாள் போட்டி) 264 ரன்கள், இங்கிலாந்தின் ஆலிஸ் பிரவுனின் (முதல் தர ஒருநாள் போட்டி) 268 ரன்கள் என்ற சாதனையையும் அவர் முறியடித்துள்ளார். மேலும் அவர்களை விடவும் குறைந்த பந்தில் அதிக ரன்களை குவித்திருப்பதுதான் இதில் சிறப்பம்சம்.
அதிக ரன்களை குவித்த அணி
மேலும், முதல்முறையாக 500 ரன்களை கடந்த முதல் தர அணி என்ற சாதனையையும் தமிழ்நாடு பெற்றுள்ளது. இதற்கு முன்னர், 498 ரன்களை இங்கிலாந்து அணி, நெதர்லாந்திற்கு எதிராக 2022ஆம் ஆண்டில் எடுத்திருந்தே அதிகபட்சமாக பார்க்கப்பட்டது.
பார்ட்னர்ஷிப்பிலும் சாதனை
முதல் தர கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த பார்ட்னர்ஷிப் என்ற சாதனையையும் படைத்துள்ளது. மேலும், மேற்கு இந்திய தீவுகள் அணியில் கிறிஸ் கெயில் - மார்லன் சாமுவெல்ஸ் ஆகியோர் 372 ரன்களை எடுத்திருந்ததுதான் அதிக ரன்களை குவித்த பார்ட்னர்ஷிப்பாக இருந்தது. இன்றைய போட்டியில், சாய் சுதர்சன் - நாராயணன் ஜெகதீசன் ஆகியோர் 416 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டியுள்ளனர்.
வரலாற்றில் முதல்முறையாக
நாராயணன் ஜெகதீசன் நடப்பு தொடரில் 6 போட்டிகளில் மொத்தம் 799 ரன்களை குவித்துள்ளார். பிகார் உடனான போட்டியில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து, ஆந்திராவுடன் 114 ரன்கள், சத்தீஸ்கர் அணியுடன் 107 ரன்கள், கோவா அணியுடன் 168 ரன்கள், ஹரியானா உடன் 128 ரன்கள் என அடுத்தடுத்து சதங்களை பதிவுசெய்தார்.
தற்போது, இந்த போட்டியில் 5ஆவது சதத்தை பதிவு செய்ததை தொடர்ந்து, விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில், ஒரே தொடரில் 5 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன், விராட் கோலி, பிருத்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் ஒரே தொடரில் 4 சதங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மினி ஏலத்தில் மின்னுவாரா ஜெகதீசன்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல வருடங்களாக இருந்த இவர் 7 போட்டிகளில் விளையாடி, மொத்தம் 73 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். எனவே, அவருக்கு சிஎஸ்கே அணியில் தொடர் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
தொடர்ந்து, வரும் ஐபிஎல் மினி ஏலத்தை முன்னிட்டு சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போதைய அவரின் உச்சக்கட்ட ஃபார்மும், ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளதை வைத்தும் பார்த்தால் வரும் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு இவர் ஏலம் போக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஐபிஎல் 2023: எந்த அணியில் இருந்து எந்த வீரர்கள் வெளியேற்றப்பட்டனர் -முழு பட்டியல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ