வேளாண் வருமானத்தை பெருக்க 16 அம்ச திட்டம்; PMK வரவேற்பு!

வேளாண் வருமானத்தை பெருக்க 16 அம்ச திட்டம் அறிவிக்கப் பட்டிருப்பதை வரவேற்பதாக பாமக நிறுவனர் தலைவர் ராமதாசு தெரிவித்துள்ளார்.

Updated: Feb 1, 2020, 05:26 PM IST
வேளாண் வருமானத்தை பெருக்க 16 அம்ச திட்டம்; PMK வரவேற்பு!

வேளாண் வருமானத்தை பெருக்க 16 அம்ச திட்டம் அறிவிக்கப் பட்டிருப்பதை வரவேற்பதாக பாமக நிறுவனர் தலைவர் ராமதாசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ள 2020&21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண் வருமானத்தை பெருக்க 16 அம்ச திட்டம் அறிவிக்கப் பட்டிருப்பதும், நிபந்தனைகளுடன் வருமானவரிக் குறைப்பு அறிவிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கின்றன. வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கம் கொண்ட இந்த நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கதாகும்.

இந்தியாவை 5 லட்சம் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டுமானால், அதற்கு வேளாண் துறை வளர்ச்சி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து, அத்துறையின் வளர்ச்சிக்காக ஏராளமான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீன் வளம், பால்வளம் ஆகியவற்றை பெருக்குதல், மாநில அரசுகளின்  உதவியுடன் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தோட்டக்கலைப் பொருட்களின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்  என்பன உள்ளிட்ட மத்திய அரசின் 16 அம்சத் திட்டம் வேளாண் வருமானத்தைப் பெருக்க உழவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வேளாண்மை மற்றும் அவை சார்ந்த துறைகள், பாசனம் ,  ஊரக வளர்ச்சி ஆகியவற்றுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 2.83 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இவற்றில் விவசாயம், பாசனம் ஆகிய துறைகளுக்கான ஒதுக்கீடு 1.51 லட்சம் கோடியில் இருந்து 1.60 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1.40 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.23 கோடியாக குறைக்கப்பட்டிருப்பது  ஏமாற்றமளிக்கிறது. குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு   தேவைக்கு ஏற்ப உயர்த்தப்படாதது கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை கடுமையாக பாதிக்கக்கூடும்.

கல்விக்கான ஒதுக்கீடு ரூ.99,300 கோடியாகவும், சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடு ரூ.69,000 கோடியாகவும் உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சென்னை & பெங்களூர்  அதிவிரைவுச் சாலை அமைக்கும் பணிகள் நடப்பாண்டில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது, 27,000 கி.மீ நீளத்திற்கு தொடர்வண்டிப் பாதைகள் மின்மயமாக்கப்படும் என்ற அறிவிப்பு, பெண்கள்& குழந்தைகள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். முதலீட்டை ஈர்க்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்புகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு புதிய தளவாடக் கொள்கை, ரூ.5 கோடி வரை வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு தணிக்கைத் தேவையில்லை என்று  அறிவிக்கப்பட்டிருப்பது, உட்கட்டமைப்பு வசதிகளை 5 ஆண்டுகளில்  ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படும் என்ற அறிவிப்பு ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புப் பெருக்கத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

நேரடி வரிகளைப் பொறுத்தவரை வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை இந்த ஆண்டும் நிராகரிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. அதேநேரத்தில் புதிய வருமானவரி விதிப்பு முறையின்படி வருமானவரி படிநிலைகளின் அளவு மூன்றிலிருந்து 6-ஆக அதிகரிக்கப் பட்டிருப்பதும், வருமானவரி விகிதங்கள் 5 முதல் 10% வரை குறைக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிப்பவை.

தமிழகத்திலுள்ள ஆதிச்சநல்லூரில் தொல்லியல் ஆராய்ச்சி நடைபெற்ற பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது தமிழர்களின் பண்டைய கலாச்சாரத்தை உலகம் அறிந்து கொள்ள வழிவகுக்கும். மத்திய அரசின் கடன்சுமை 4.50% குறைந்திருப்பதும் மகிழ்ச்சியளிப்பதாகும்.

அதேநேரத்தில் தனியார்மயமாக்கலுக்கான கதவுகள் அகலமாக திறக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. நிதி ஆயோக்கின் பரிந்துரையை ஏற்று அரசு மற்றும் பொதுத்துறை கூட்டு முயற்சியில் 2000 மருத்துவ மனைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசு வளங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி என்பது மட்டுமின்றி, மருத்துவக் கட்டணத்தை கணிசமாக உயர்த்துவதற்கு வழிவகுக்கும். உயர்கல்வித்துறையில் நேரடியாக அன்னிய முதலீட்டை அனுமதிப்பதையும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எல்.ஐ.சி. எனப்படும் இந்திய ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளை பங்கு சந்தைகள் மூலம் தனியாருக்கு விற்கும் முடிவு மிகவும் ஆபத்தானது ஆகும். எல்.ஐ.சி. மூலம் மத்திய அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவில் ஈவுத்தொகை கிடைத்து வருகிறது. பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டால் அந்தத்தொகை குறைந்து விடும். பொதுத்துறை நிறுவனங்களை படிப்படியாக தனியாருக்கு  விற்பனை செய்வது மத்திய அரசின் வரி இல்லாத வருவாயை குறைத்து விடும். இது நல்ல விஷயமல்ல.

தமிழ்நாட்டு நலன் சார்ந்த விஷயங்களை எடுத்துக் கொண்டால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டம் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. பாசனத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பாசனத் திட்டங்களை செயல்படுத்த போதுமான அளவில் நிதி ஒதுக்கப்பட வேண்டும். காலநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகளை  கட்டுப்படுத்த காலநிலை மாற்ற நெருக்கடி நிலை அறிவிக்கப்படாததும் வருத்தமளிக்கிறது. நிதிமசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக இதுகுறித்த அறிவிப்பை வெளியிட மத்திய அரசு முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.