சுகாதாரமற்ற குடிநீரால் பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேர் பலி - சாயல்குடியில் சோகம்

ராமநாதபுரம் அருகே சுகாதாரமற்ற குடிநீரை பருகியதால், பள்ளி மாணவர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - Sudharsan G | Last Updated : Sep 18, 2022, 03:30 PM IST
  • நால்வரும் மஞ்சள் காமாலையால் பாதிப்பு
  • 10 நாட்களில் நால்வரும் அடுத்தடுத்து உயிரிழப்பு
  • உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க கோரிக்கை
சுகாதாரமற்ற குடிநீரால் பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேர் பலி - சாயல்குடியில் சோகம் title=

ராமநாதபுரம் சாயல்குடி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை, சரிவர பராமரிக்காததால் மஞ்சள் காமாலை நோய் தாக்கி அரசுப்பள்ளி மாணவன் மற்றும் மாணவி உள்ளிட்ட நால்வர் உயிரிழந்தனர். சாயல்குடி அருகேயுள்ள கன்னிராஜபுரம் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனைத்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

அங்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் திறந்தவெளி கிணறுகள் அமைக்கப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ரோச்மா நகர், பிழை பொருத்தம்மன் குடியிருப்பு  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், ஊராட்சி நிர்வாகம் சார்பில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உரிய பராமரிப்பன்றி குப்பைகளுடன் திறந்த நிலையில் இருப்பது மட்டுமின்றி, குடிநீர் கிணறுகள் உரிய பாதுகாப்பின்றி இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

மேலும் படிக்க | ஹீலியம் வாயுவை சுவாசித்து திருமணமாகி 4 மாதமே ஆன பெண் தற்கொலை!

10 நாள்களில் அடுத்தடுத்து மரணம் 

குறிப்பாக, குடிநீர் கிணறுகளின் அருகே விஷ செடிகள் முளைத்தும் , குடிநீர் கிணற்றின் அருகே கழிப்பறையை கட்டியதன் மூலம் பல்வேறு சுகாதாரக் கேடுகளும் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், அந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து விநியோகிக்ப்பட்ட, சுகாதாரமற்ற குடிநீரை பருகியதால் மஞ்சள் காமாலை நோய் தாக்கி கன்னிராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வந்த ஆகாஷ், அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி அம்சவல்லி, அதே பகுதியை சேர்ந்த ரதி (32), பனைத்தொழிலாளி வெற்றிவேல் (36) ஆகியோர் சிகிச்சை பலனின்றி கடந்த 10 நாட்களில், தொடர்ச்சியாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து,கன்னிராஜபுரம் பொதுமக்கள்,'ஊராட்சியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சரிவர பராமரிக்க வேண்டும்; குடிநீர் கிணறுகளின் அருகே கழிவறைகளை கட்டக்கூடாது என கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை எடுத்துக் கூறினோம். ஆனால், அவர் எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவேயில்லை' என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

முறையற்ற வகையில் விநியோகம்

மேலும்,'கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளது. ஆனால், மாவட்டத்தின் கடைக்கோடி கடற்கரை பகுதியான கன்னிராஜபுரம் கிராமத்தில் நிலத்தடி நீர் சுவையாக இருப்பதால், ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் குடிநீர் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு துருப்பிடித்த டேங்கர்கள் மூலம் கொண்டு செல்லப்படும் குடிநீர்  முறையாக பராமரிக்கப்படாததால் பொதுமக்களுக்கு சிறுநீரக கல் உருவாகுதல், மஞ்சள் காமாலை , காய்ச்சல், கை கால் வலி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது' அப்பகுதியினர் குற்றம் சுமத்துகின்றனர்.

அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை

ஆகவே, விதிமுறைகளை மீறி இயக்கப்படும் டேங்கர் வாகனங்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | நிறைமாத கர்ப்பிணியை அலைகழித்த அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு அரசு அதிகாரி எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News