ஜெய்பீம் விவகாரம் விலை பேச முற்படுவது வேதனை - நாசர் கவலை

அரசியலை வியாபாரமாக்குவதும் வியாபாரத்தை அரசியலாக்குவதும் இந்த ஒரு நிகழ்வோடு நிறுத்தி விடுவீராக! -நடிகர் நாசர் வேண்டுகோள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 16, 2021, 07:06 PM IST
ஜெய்பீம்  விவகாரம் விலை பேச முற்படுவது வேதனை - நாசர் கவலை

சென்னை: பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் துன்பங்களையும் எடுத்துக்கூறும் படமாக வெளிவந்து அனைவரின் கவனத்தை ஈர்த்த "ஜெய்பீம்" (Jai Bhim) படத்தின் சில காட்சிகள் சர்ச்சையை எழுப்பியுள்ளது. அதாவது இந்த படத்தில் வில்லனாக காட்டப்பட்டுள்ள போலீஸ் கதாப்பாத்திரத்தின் உண்மையான பெயர் அந்தோணி சாமி என்பதை வைக்காமல், மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. அதேபோல் குற்றவாளி கதாபாத்திரத்தின்  பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தததை தொடர்ந்து, படத்தில் இருந்த அந்த "காலண்டர் காட்சி" திருத்தம் செய்யப்பட்டது.

ஆனால் இந்த விமர்சனங்களை அடுத்து, பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss), சூர்யாவை நோக்கி பல கேள்வி எழுப்பி கடிதம் ஒன்றை தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட விவகாரம் சூடுப்பிடிக்கத் தொடங்கியது. அன்புமணியின் அறிக்கையைஅடுத்து நடிகர் சூர்யாவும் விரிவான பதில் அளித்திருந்தார். இந்த விவாகரத்துக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது என அனைவரும் நினைத்திருந்த நிலையில், வன்னியர் சங்கம் சார்பில் ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதாவது ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக  தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் (T. J. Gnanavel) மற்றும் படம் வெளியான ஓடிடி தளமான அமேசான் (Amazon Prime Video) ஆகியோருக்கு வன்னியர் சங்கத்தின் தலைவர் அருள் மொழி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் ரூ.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும், வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் வன்னியர்களின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தியதற்காக 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அப்படி கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

ALSO READ |  ஜெய் பீம் படத்தால் அடுத்த சிக்கலில் சூர்யா; 5 கோடி நஷ்ட ஈடு

இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பேச்சு பொருளாக மாறியது. பலர் நடிகர் சூரியாவுக்கு (Actor Suriya) ஆதரவாக #WeStandWithSuriya என்ற ஹேஸ்டேக் மூலம் ஆதரவு தெரிவிக்க, அது ட்ரெண்டிங் ஆனது. 

"ஜெய்பீம்" பட விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், இதுத் தொடர்பாக இதுவரை திரைத்துறை சார்பில் யாரும் ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர்கள் சங்கம் எனத் தொடங்கி மூத்த நடிகர்கள் சூரியாவுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். மேலும் இந்த விவகாரம் ஊதி பெரிதாக்க வேண்டாம் எனவும் பாமகவிடம் (PMK) கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில், தற்போது நடிகர், நடிகைகள் சமூகம் சார்பாக எனக் குறிப்பிட்டு நடிகர் நாசர் "ஜெய்பீம்" பட விவகாரம் தொடர்பாக ஆதரவு கரம் நீட்டியுள்ளார். அவர் தனது அறிவிப்பில் கூறியதாவது,

ஓ என் பாசத்திற்குரியீர் !

அரசியலை வியாபாரமாக்குவதும் வியாபாரத்தை அரசியலாக்குவதும் இந்த ஒரு நிகழ்வோடு நிறுத்தி விடுவீராக! யாரும் தனிமனிதரல்ல இந்த தரணியிலே, அப்படி தனித்தனியா குரல் கொடுப்பதினாலேயே இன்று நாம் தனித்தனி தீவுகளாக மிதந்து கொண்டிருக்கிறோம். ஒன்றுகூடி தீர்க்க வேண்டியவைகளின் பட்டியல் நீண்டு கிடக்கிறது. கூட்டாக உருவாக்கப்படும் திரைப்பட ஊடகத்தில் தனியொரு நபரின் கருத்துக்களாக வெளிவருவதில்லை. சமயத்தில் சொந்தக் கருத்துக்களையும் ஒதுக்கி வைத்து படம் சொல்கின்ற கருத்தினை சொல்ல வேண்டியிருக்கிறது. 

ALSO READ | சூர்யாவுக்கு ஆதரவு இல்லை: கமுக்கமாக இருக்கும் சக நடிகர்கள்

நம் வரலாற்றில் சோகமும் வலியுமாய் அடங்கி கிடக்கிறது. ஒவ்வொரு கலைக்கும் ஊடகத்திற்கும் அதனதற்கான சமுதாயப் பொறுப்புகள் இருக்க செய்கின்றன. தம்பி சூர்யா அவருக்குக் கொடுத்த பொறுப்பினை செவ்வனே செய்யத்தான் முற்பட்டிருக்கிறார். வேறு உட்காரணங்கள் இருப்பதாக வர்ணம் பூசி, போதுமான அளவிற்கு அறுத்து ஆயப்பட்டு விட்டது. சிலர் மனம் புண்பட்ட அந்த பிம்பம்கள் படத்தினின்று எடுத்தெறியப்பட்டு விட்டதாகவும் அறிகிறேன்.

இந்தச்சூழலில் இதற்கான, விலை பேச முற்படுவது வேதனை. எதிர்காலம் குறித்த கவலையையும், அச்சத்தையும் கொண்டு சேர்க்கிறது. சம்பந்தபட்டவர்கள் இத்தோடு இதனை முடிவுக்கு கொண்டு வருவது பொது சமூகத்திற்கு நன்று.

மேற் சொன்னதுபோல் ஒன்றுகூடி ஆற்ற வேண்டிய  கடமைகளும், எடுக்கப்பட வேண்டிய தீர்வுகளும் எண்ணிலடங்கா சிதறிக்கிடக்கின்றன. வன்மமின்றி அன்பால் அதைப் பொறுக்கிச்சேர்ப்போம், புதியதோர் உலகஞ்செய்வோம்.

நன்றி! 

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ |  சூர்யாவை விமர்சித்த அன்புமணிக்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News