ஜெய்பீம் திரைப்படத்தை அரசியலுக்குள் சுருக்க வேண்டாம்: நடிகர் சூர்யா கடிதம்

ஜெய்பீம் திரைப்படத்தை அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் என்று பாமகவின் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாசுக்கு நடிகர் சூர்யா கடிதம் எழுதியுள்ளார்...

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 11, 2021, 08:51 PM IST
  • ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை
  • திரைப்படத்தை அரசியலுக்குள் சுருக்க வேண்டாம்
  • பாமவுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்
ஜெய்பீம் திரைப்படத்தை அரசியலுக்குள் சுருக்க வேண்டாம்: நடிகர் சூர்யா கடிதம்

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிய ஜெய் பீம் திரைப்படம் பலரின் பாராட்டுக்களையும் பெற்ற அண்மைத் திரைப்படம்.  ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சூர்யா (Actor Suriya), காவல்துறையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு நீதிபெற்று கொடுத்த உண்மை கதையில் நடித்திருந்தார்.

ஆனால், இந்த திரைப்படம் குறித்த சில சர்ச்சைகளும் வெளியாகின. ஜெய் பீம் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்த காலண்டர் சர்ச்சைக்கு காரணமானது. வன்னியர் சங்கங்களின் எதிர்ப்பை அடுத்து, காலண்டர் மாற்றப்பட்டது. ஆனால் இது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. இந்த நிலையில், ஜெய் பீம் திரைப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தின் விவரம்:

மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு,

வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி.  

நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், ‘அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது’ என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு. பழங்குடியின மக்கள் நடைமுறையில்  சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் படத்தில் பேச  முயற்சித்திருக்கிறோம்.

ALSO READ | 'ஜெய் பீம்' படத்திற்கு பெருமை சேர்த்த தமிழக முதல்வர்!

கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி  சரி செய்யப்பட்டதைத்  தாங்கள் அறீவிர்கள் என நினைக்கிறேன்.

‘படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை’என்கிற தங்களின் கருத்தை முழுவதுமாய் நான் ஏற்கிறேன். அதேபோல,  ‘படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும்’என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. ‘இத்திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்கிற அறிவிப்பைப் படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்திருக்கிறோம்.

READ ALSO | ஜெய் பீம் படத்தில் சர்ச்சைக்குள்ளான காலண்டர் காட்சி மாற்றப்பட்டது!

”எளிய மக்களின் நலன்மீது அக்கறையில்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும், அவர்கள் ஒரே மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள். அதில் சாதி, மத, மொழி, இன பேதம் இல்லை. உலகம் முழுவதும் இதற்கு சான்றுகள் உண்டு. படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை,  குறிப்பிட்ட ’பெயர் அரசியலுக்குள்’ சுருக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”.

”ஒருவரைக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார். எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடப்படுவதாக  கருதப்படுமேயானால், அதற்கு முடிவே இல்லை. அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், ‘பெயர் அரசியலால்’ மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது”.

”சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம். தங்கள் புரிதலுக்கு நன்றி”.

நடிகர் சூர்யாவின் இந்த வெளிப்படையான கடிதம், பிரச்சனையின் சூட்டைத் தணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | பழங்குடியின மக்களின் நலனுக்காக ரூ.1 கோடி வழங்கிய நடிகர் சூர்யா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News