இந்தியாவில் மாசுகளுக்கு 25 லட்சம் பேர் சாவு என்ன செய்யப் போகிறது அரசு என்றும் உலகிலேயே இந்தியாவில் மட்டும் தான் மாசுகளுக்கு அதிக பேரை பலி கொடுக்கப்படுகிறது. என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :
காற்று, நீர் உள்ளிட்ட மாசுக்களால் ஏற்படும் உயிரிழப்புகள், பாதிப்புகள் குறித்து லான்செட் மருத்துவ இதழ் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் வெளியாகியுள்ள உண்மைகள் அதிர்ச்சியளிக்கின்றன. உலகம் முழுவதும் மாசுகளுக்கு ஆண்டுக்கு 90 லட்சம் பேர் உயிரிழக்கும் நிலையில், அவர்களில் 25 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் பல்வேறு மாசுகளுக்கு அதிகம் பேரை பலி கொடுக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் இருப்பது கவலையளிக்கிறது.
தில்லியிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், அமெரிக்காவின் ஐஹான் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன. கடந்த 2015-ஆம் ஆண்டில் உலகெங்கும் மாசுகளால் மட்டும் 91 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். காற்று மாசுவால் 65 லட்சம் பேர் இறந்துள்ளனர். நீர் மாசுவுக்கு 18 லட்சம் பேரும், மற்ற மாசுகளுக்கு 8 லட்சம் பேரும் உயிரிழந்திருப்பதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
உலகிலேயே இந்தியாவில் தான் மாசுகளுக்கு அதிகம் பேர், உயிரிழந்துள்ளனர். மாசுகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் 27.47% இந்தியாவில் ஏற்படுகிறது என்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடிய விஷயமல்ல, அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். லான்செட் தான் உலகின் தலைசிறந்த மருத்துவ இதழாகும். மருத்துவ உலகின் பைபிள் என போற்றப்படும் இந்த இதழில் வெளியிடப்படும் தகவல்கள் 100% விழுக்காடு உண்மையானவை; உறுதியானவை என்பதால் இதில் மத்திய, மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குடிப்பழக்கத்தால் 18 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். புகைப்பதால் 10 லட்சம் பேர் இறக்கின்றனர். இந்த தீமைகள் தான் மனித உயிர்களை அதிக அளவில் பறிப்பதாக நினைத்துக் கொண்டிருந்த நிலையில், இவற்றை விட அதிக உயிரிழப்பை மாசுக்கள் ஏற்படுத்துவதை சகித்துக் கொள்ளக்கூடாது.
மாசுக்களால் இதய நோய்கள், பக்கவாதம், நுரையீரல் புற்று நோய், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நெஞ்சக நோய்கள் மற்றும் தோல் நோய்கள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் மாசுக்களைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பது தான். தேசிய அளவிலும், மாநில அளவிலும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், அவை கையூட்டு வாங்கும் மையங்களாக திகழ்கின்றனவே தவிர மாசுக்களைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
தீபஒளித் திருநாளையொட்டி பட்டாசுகள் வெடித்ததால் மிகக்கடுமையான காற்று மாசு ஏற்பட்டது. அதைத் தடுக்கவோ, அதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவோ மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சென்னையில் சேரும் குப்பைகளை கொடுங்கையூரிலும், பெருங்குடியிலும் பாதுகாப்பற்ற முறையில் எரித்து அப்பாவி மக்களைக் கொல்லும் படுபாதகச் செயலில் தமிழக அரசே ஈடுபடுகிறது.
தமிழகத்தில் மிக மோசமான நீர் மாசு ஏற்படுத்தும் ஆதாரமாக திருப்பூர் சாயப்பட்டறைகள் திகழ்வதாகவும், அவற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவுகள் நொய்யலாற்றில் கலக்கவிடப்படுவதால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படுவதாகவும் லான்செட் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சரோ நொய்யலாற்றில் சாயப்பட்டறைக் கழிவுகள் திறந்து விடப்படவில்லை என்றும், பொதுமக்கள் சோப்புப்போட்டு குளிப்பதால் தான் நொய்யலாற்றில் நுரை அதிகமாக வருவதாகவும் விளக்கமளிக்கிறார். இவர்களைப் போன்றவர்கள் அமைச்சர்களாக இருக்கும் வரை தமிழகத்தில் காற்று, நீர் மாசுகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகளை தடுப்பது சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கும்.
தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் தான் அதிக அளவில் காற்று மற்றும் நீர் மாசு ஏற்படுவதாக லான்செட் ஆய்வு தெரிவிக்கிறது. வாலாஜாபேட்டை, பேரணாம்பட்டு, வளையாம்பட்டு, மேல் விஷாரம், கீழ் விஷாரம், ஆம்பூர், துத்திப்பட்டு, பச்சக்குப்பம், இராணிப்பேட்டை, புளியந்தாங்கல், தண்டலம், சி.வி. பட்டறை உள்ளிட்ட இடங்களில் நீர் நிலைகளும், நிலத்தடி நீரும் மிகக்கடுமையாக மாசடைந்து இருப்பதாக லான்செட் ஆய்வு கூறுகிறது.
கடலூர் மாவட்டத்தில் ஈச்சங்காடு பகுதியில் இரசாயன ஆலைகள் அதிக அளவில் செயல்பட்டு வருவதால் காற்றும், நீரும் மோசமாக மாசுபட்டிருக்கின்றன. அங்குள்ள நீரில் மெத்தில் குளோரைடு அதிகளவில் கலந்திருப்பதை லான்செட் ஆய்வு கண்டறிந்துள்ளது.
திருப்பூர், கோவை, கொடைக்கானல், காஞ்சிபுரம், மணலி உள்ளிட்ட இடங்களிலும் காற்றும், நீரும் தொழிற்சாலைக் கழிவுகளால் மாசுபட்டிருக்கின்றன. தமிழகத்தில் மாசுகளுக்கு எதிராக போராடி வரும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான்.
கடலூர் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளையும், வேலூர் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகள் மற்றும் இரசாயன தொழிற்சாலைகளால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுக்க வலியுறுத்தி மருத்துவர் அய்யா தலைமையிலும், எனது தலைமையிலும் ஏராளமான போராட்டங்கள், விழிப்புணர்வு பேரணிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டுள்ளன. ஆனால், திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் இவை அனைத்தும் கண்டுகொள்ளப்படாமல் போனதன் விளைவு தான் தமிழகம் மோசமான மாசுக்காடாக மாறியிருக்கிறது.
தமிழகத்தை இப்போது சீரழித்துக் கொண்டிருக்கும் தீமைகள் போதாது என்று கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களை வளைத்து பெட்ரோலிய மண்டலம் அமைக்க பினாமி அரசு அனுமதி அளித்துள்ளது. கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் உலகின் மாசு தலைநகராக தமிழகம் உருவெடுக்கவும், அப்பாவி மக்கள் மிக மோசமான நோய்களால் தாக்கப் பட்டு உயிரிழக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இவற்றுக்கு மத்திய, மாநில அரசுகள் இடமளிக்கக்கூடாது.
மாசுக் கேட்டிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற வேலூர், கடலூர், திருப்பூர் மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள், குப்பைக் கழிவுகள் ஆகியவற்றால் ஏற்படும் மாசுகள் குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும்.
அதிக மாசுகளை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும். பெட்ரோலிய மண்டலம் உள்ளிட்ட மாசு ஏற்படுத்தும் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வலுப்படுத்தப்பட்டு, காற்று, நீர் உள்ளிட்ட அனைத்து மாசுகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
என தெரிவித்துள்ளார்.