நெருங்கும் பருவமழை: வெள்ளத்தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: PMK

புறநகர் மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நீர் தேங்காமல் உடனடியாக வடியச் செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி இராமதாஸ் கோரிக்கை!!

Last Updated : Oct 26, 2020, 10:49 AM IST
நெருங்கும் பருவமழை: வெள்ளத்தடுப்பு  பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: PMK title=

புறநகர் மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நீர் தேங்காமல் உடனடியாக வடியச் செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி இராமதாஸ் கோரிக்கை!!

மழை - வெள்ளம் ஏற்பட்ட பிறகு அவற்றிலிருந்து மக்களை மீட்க நடவடிக்கைகளை மேற்கொள்வது  வேறு. மழையால் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பது வேறு. முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் தான்  எப்போதும் மக்களைக் காக்கும். எனவே, சென்னையில் பெருமழை பெய்வதற்கு முன்பாக மாநகரின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்... "தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருக்கிறது. வடகிழக்குப் பருவமழையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக சென்னை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் இன்னும் முடிவடையாதது சென்னையில் வெள்ளத்திற்கு வழிவகுத்து விடுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் இரு ஆண்டுகளில் கடுமையான வெள்ளத்தையும், ஓராண்டில் ஓரளவு வெள்ளத்தையும் தமிழ்நாடு  சந்தித்திருக்கிறது. கடுமையான வெள்ளம் ஏற்பட்ட இரு ஆண்டுகளில்  தமிழகம் மிகக்கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன்  புறநகர் மாவட்டங்கள், கடலூர் மாவட்டம் ஆகியவை தான் பேரழிவுகளை சந்தித்தன என்பது அனைவரும் அறிந்த உண்மை. 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் பெய்த தொடர்மழையால் மேற்கண்ட மாவட்டங்கள்  எத்தகைய அழிவுகளை சந்தித்தனவோ, அதே அளவு சேதங்களை, நடப்பாண்டில் கடுமையான மழை பெய்யும் பட்சத்தில் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

இதற்கான காரணம்... சென்னை, புறநகர் மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தின் பாதிப்புகளை தடுப்பதற்கான பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை என்பது தான். குறிப்பாக தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தடுப்பு பணிகள் இப்போதைக்கு முடிவடைவதற்கான  வாய்ப்புகள் தென்படவில்லை. சென்னையின் முக்கியச் சாலையான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, 100 அடி சாலை என அழைக்கப்படும் ஜவகர்லால் நேரு சாலை, கலைஞர் கருணாநிதி நகர், முகப்பேர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பருவமழை தீவிரமடையும் போது, இந்த பணிகள் முடிவடையாத பட்சத்தில், மழை நீர் வெளியேற வழியில்லாமல் தண்ணீர் தேங்கவும், வெள்ளம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

ALSO READ | தபால் அலுவலகத்தின் 7 சூப்பர்ஹிட் திட்டங்கள்... இதில் கிடைக்கும் நன்மைகள் என்ன?

சென்னையை விட சென்னையின் புறநகர் பகுதிகளில் தான் மிகக்கடுமையான மழை பெய்யக்கூடும். சென்னை மாநகர ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக திகழும் புறநகர் பகுதிகளில் ஒரே நாளில் 25 செ.மீ வரை மழை பெய்யக்கூடும். அவ்வாறு மழை பெய்யும் போது அவற்றை கடத்திச் செல்வதற்கான கட்டமைப்புகள் இல்லை. மழை நீர் வடிகால் பாதைகளை அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் சில இடங்களில் மீண்டும் முளைத்திருப்பதால் அவை பாதிப்புகள் ஏற்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த 12-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்தும், மழை & வெள்ளம் கட்டுக்கடங்காமல் சென்றால் நிலைமை சமாளிக்க செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அந்தக் கூட்டத்திற்கு பிறகு நீண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. அவ்வளவுக்குப் பிறகும் தான் சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகளில் வெள்ளத்தடுப்பு பணிகள் நிறைவடையாமல் உள்ளன.

கடந்த 2015, 2017 பருவமழையின் போது சென்னையிலும், பிற வட மாவட்டங்களிலும் ஏற்பட்ட பாதிப்புகளை மக்கள் இன்னும் மறக்கவில்லை. இன்னும் ஒரு முறை அத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டால் அதை தாங்கிக் கொள்ளும் நிலையிலும் மக்கள் இல்லை. கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட பாதிப்புகள், அதைக் கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளால் ஏற்பட்ட இழப்புகள் ஆகியவற்றிலிருந்து மக்களால் இன்னும் மீண்டு வர முடியவில்லை. இத்தகைய சூழலில் மழை - வெள்ளம் தாக்கினால், அதன் பாதிப்புகளை மக்களால் நிச்சயமாக தாக்குபிடிக்க முடியாது.

மழை - வெள்ளம் ஏற்பட்ட பிறகு அவற்றிலிருந்து மக்களை மீட்க நடவடிக்கைகளை மேற்கொள்வது  வேறு. மழையால் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பது வேறு. முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் தான்  எப்போதும் மக்களைக் காக்கும். எனவே, சென்னையில் பெருமழை பெய்வதற்கு முன்பாக மாநகரின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், புறநகர் மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நீர் தேங்காமல் உடனடியாக வடியச் செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

Trending News