தமிழ்நாடு ஜமாஅத் உலமா சபை நிர்வாகிகள் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ள விவகாரம் தற்போது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘டிரம்ப் போன்றவர்கள் வந்த சமயத்தில் இந்த போரட்டம் நடந்துள்ளது. இது போன்ற போராட்டங்களை மத்திய அரசு ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பபெறாது’ என தெரிவித்தார்.
மேலும் CAA குறித்தும் NPR, NRC குறித்தும் தங்களுக்கு புரிதல் வேண்டும் என எழுதிய இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களை அழைத்து நேரில் பேசுவோம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் இல்லத்தில் ஹஜ் அசோசியேஷன் தலைவர் முகமது அபூபக்கர் நேற்று சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து இன்று ஜமாஅத் உலமா சபை நிர்வாகிகள் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசியுள்ளனர்.
இச்சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காஜா முயீனுத்தீன் பாகவி தெரிவிக்கையில்., "குடியுரிமை சட்டத்தின் பாதிப்புகள் குறித்து விளக்கினோம். மக்களின் அச்சத்தைப் போக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் ரஜினி தெரிவித்துள்ளார். CAA, NPR, NRC உட்பட பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். இதுமட்டுமின்றி முஸ்லிம் மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தோம்” என தெரிவித்தார்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் கடுமையாக போராட்டங்கள் நடைபெற்று வந்த போதிலும், 15 நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே ஆங்காங்கு நடைபெற்று வந்தது. ஆனால் இன்று ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் தமிழகத்தில் போராட்டம் அதிகரித்து வலுவடைந்துள்ளது. இதற்கு காரணம் கடந்த 14-ஆம் தேதி இரவு வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணி நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி தான். அதன் விளைவாக இன்று சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டணம், உள்ளிட்ட பல இடங்களில் இரவு பகல் பாராமல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே குடியுரிமை சட்டம் விவகாரத்தில் ரஜினிகாந்த் கூறிய கருத்து அவரை கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது. மேலும் அவர் பாஜக-வின் விசுவாசி என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நிகழ்ந்துள்ள இந்த சந்திப்பு, தன் மீதான கரையை துடைக்க ரஜினி மேற்கொண்ட முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
காரணம், தன்னை பார்க்க வந்த இஸ்லாமிய மதகுருமார்கள் அனைவருக்கும் பச்சை நிற பட்டு சால்வை அணிவித்து வரவேற்ற ரஜினி, தாம் என்றும் இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் உறுதியளித்துள்ளார். மேலும், உங்களின் அச்சத்தை நீக்க தாம் நடவடிக்கை எடுப்பதாக ரஜினி உறுதிகொடுத்தார். தனக்கு பின்னால் பாஜக இல்லை என்றும், தான் தனி மனித சுதந்திரத்துடன் செயல்பட்டு வருவதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஜினியின் CAA தொடர்பான கருத்துக்கள் வைரலாக பரவி வந்த நிலையில் தற்போது இஸ்லாமிய மதகுருமார்களுடன் நிகழ்ந்துள்ள சந்திப்பு தனது நண்பர் வட்டாரத்தின் உதவியால் ரஜினி ஏற்படுத்திய சந்திப்பு எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.