வேட்புமனு தாக்கல் செய்ய முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது, முதல் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் சேர்த்து நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 லோக்சபா தொகுதிகள் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
வேட்புமனு தாக்கல் செய்ய முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னையில் தெரிவித்துள்ளார்.
மேலும் வடசென்னையில் 4 வேட்பாளர்களும், தென் சென்னையில் 3 வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர் எனவும், திருப்பூர் மற்றும் ராமநாதபுரத்தில் தலா 2 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை வரும் மார்ச் 27-ஆம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற 29-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து வரும் மே 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.