மாட்டுக்கறிக்கு தடை... திராவிட ஆட்சியா? சங்பரிவார் ஆட்சியா?

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை விதித்துவிட்டு ஆவடி அருகே 25 ஏக்கர் அளவில் பசு மடங்களை அமைக்கவிருப்பது குறித்து திராவிட மாடல் என்று கூறும் ஆளுங்கட்சியினர் ஏன் மௌனம் சாதிக்கின்றனர் என்ற கேள்வியும் எழுகிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 12, 2022, 02:56 PM IST
  • ஆம்பூர் பிரியாணி திருவிழா
  • பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை
  • மாட்டுக்கறி பிரியாணிக்கு தடை
 மாட்டுக்கறிக்கு தடை... திராவிட ஆட்சியா? சங்பரிவார் ஆட்சியா? title=

ஆம்பூரில் மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் பிரியாணி திருவிழா நடக்கிறது. நாளை தொடங்கும் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணிக்கு அனுமதியில்லை என வேலூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் மட்டுமே மாட்டு இறைச்சிக்கு தடை போன்ற அறிவிப்புகள் வந்த சூழலில் தற்போது தமிழ்நாட்டில் திராவிட கட்சியின் ஆட்சியில் மாட்டு இறைச்சிக்கு தடை என்ற அறிவிப்பு வந்திருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Yogi

திமுக எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் மாட்டிறைச்சி விவகாரத்தில் இருந்த நிலையிலிருந்து ஆட்சிக்கு வந்த பிறகு மாறிவிட்டதோ என்ற ஐயத்தையும், தெற்கு தேய்ந்து வடக்காக மாறுகிறதோ என்ற அச்சத்தையும் அவர்கள் எழுப்புகின்றனர்.

உணவு என்பது அவரவர் விருப்பத்தைச் சார்ந்தது. ஒருவருக்கு விருப்பமில்லாத மொழி அவருக்கு திணிக்கப்படுவது எப்படி அறம் ஆகாதோ அதேபோல்தான் ஒருவருக்கு பிடித்த உணவை சாப்பிட விடாமல் செய்வதும், அதற்கு அங்கீகாரம் கொடுக்காமல் இருப்பதும்.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பாசிசத்தை எதிர்ப்போம் என்ற பரப்புரையை முன்வைத்தது. அதன் அடிப்படையில்தான் விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் திமுகவுடன் கூட்டணி வைத்தன.ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு உணவுக்கு அங்கீகாரம் கொடுக்க மறுக்கும் காட்சியை நிச்சயம் கூட்டணி கட்சியினர் விரும்பமாட்டார்கள்.

Beef Biryani

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை விதித்துவிட்டு ஆவடி அருகே 25 ஏக்கர் அளவில் பசு மடங்களை அமைக்கவிருப்பது குறித்து திராவிட மாடல் என்று கூறும் ஆளுங்கட்சியினர் ஏன் மௌனம் சாதிக்கின்றனர் என்ற கேள்வியும் எழுகிறது.

மேலும் படிக்க | இருளில் தவித்து வந்த இருளர் இன மக்கள் - சொந்த நிதியிலிருந்து கரம் நீட்டிய கலெக்டர்

அதேசமயம் கால்நடைகளின் நலனுக்காக 25 ஏக்கர் அளவில் அந்த மடங்கள் அமைக்கப்படுகின்றன என்று கூறப்பட்டாலும் மடங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கொஞ்சம் மக்களின் உணர்வுக்கும், அவர்களின் விருப்ப உணவுக்கும் கொடுக்க வேண்டுமென்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

sekar Babu

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க செய்யும் ஆட்சி திமுக ஆட்சி என கூட்டத்துக்கு கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்க அதே திமுக ஆட்சியில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை என வருவது முரணாகவே இருக்கிறது. 

மேலும் படிக்க | கோவை அகதிகள் முகாமில் கைகலப்பு: இருவருக்கு கத்திக்குத்து

பட்டண பிரவேசத்தில் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது, விக்னேஷின் லாக் அப் டெத், ஆர்.ஏ. புரம் மக்கள் வெளியேற்றம் என ஆளுங்கட்சியின் சமீபத்திய நடவடிக்கைகள் அனைத்துமே எளிய மக்களுக்கும், அவர்களின் உணர்வுக்கும் எதிராகவே இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை என்ற நடவடிக்கையும் சேர்ந்திருக்கிறது.

இப்படியே சென்றால், இது திராவிட மாடல் ஆட்சியா இல்லை சங்பரிவார் ஆட்சியா என்று சிலரிடம் தற்போது எழுந்திருக்கும் முணுமுணுப்பு சத்தமாகவே கேட்க ஆரம்பிக்கும் என்பது நிதர்சனம்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News