உலகளாவிய டெண்டர் மூலம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உலகளாவிய டெண்டர் மூலம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்ய தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Written by - ZEE Bureau | Last Updated : May 12, 2021, 06:06 PM IST
உலகளாவிய டெண்டர் மூலம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது. பல உச்சங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த தொற்றை கட்டிப்படுத்த முடியாமல் மக்களும் நிர்வாகமும் திகைத்து நிற்கின்றன. இதற்கிடையில் உலகளாவிய டெண்டர் மூலம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்ய தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை இன்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது.,
தமிழ்நாடு முதலமைச்சர் (TN CM MK Stalin) மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (12.5.2021) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் நடைபெற்ற கலைவாணர் அரங்கிலுள்ள முதலமைச்சர் அறையில், தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ALSO READ | CM MK stalin: உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் நிவாரணம்

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒன்றிய அரசு தடுப்பூசிகளை வழங்கி வரு 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு, மாநில அரசுகளே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்திற்கு சுமார் 13 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடு, 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதிய அளவில் இல்லை. எனவே, உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, குறுகிய காலத்திற்குள் 18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு முனைப்புடன் எடுக்கும்.

மேலும், தமிழகத்தின் ஆக்சிஜன் பயன்பாட்டை ஒப்பிடும் போது, நமது மாநிலத்திற்கான மத்திய அரசின் ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. இதனை உயர்த்தி வழங்கிட வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். அந்த வேண்டுகோளை ஏற்று, தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 280 டன்னிலிருந்து 419 டன்னாக உயர்த்தப்பட்டுள்ள போதிலும், இன்னும் கூடுதலாக ஆக்சிஜன் தமிழகத்திற்குத் தேவைப்படுகிறது. எனவே, போதிய ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை உடனடியாக அமைத்திடவும், பிற மாநிலங்களில் உள்ள எஃகு உற்பத்தி தொழிற்சாலைகளிலிருந்து தமிழகத்திற்கு இரயில்கள் மூலமாக ஆக்சிஜனை கொண்டு வருவதற்கும், அவ்வாறு பெறப்படும் ஆக்சிஜனை தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு சீராக விநியோகம் செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுத்திடுமாறு தொழில் துறைக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உத்தரவிட்டார்கள்.

ALSO READ | கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா. சுப்பிரமணியன், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், தொழில் துறை முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. உலகளாவிய டெண்டர் விடப்படுவதால், அமெரிக்காவின் ஃபைசர், மாடர்னா உள்ளிட்ட புகழ் பெற்ற தடுப்பூசிகளை தமிழகத்தில் கொள்முதல் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News