Katchatheevu Issue: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மொத்தம் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறுகிறது. ஏப். 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியின் 1 தொகுதியிலும் வரும் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அந்த வகையில், திமுக - அதிமுக - பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. இதில் திமுக நேரடியாக 21 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சிகள் 18 தொகுதிகளிலும் போட்டி நடைபெறுகின்றன. நாமக்கல் தொகுதியில் கொமதேக வேட்பாளர் மட்டும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகிறார். அதிமுக மொத்தம் 32 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகின்றன. அதன் கூட்டணியில் தேமுதிக 5 தொகுதிகளில் தனிச்சின்னத்திலும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ தலா 1 தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிடுகின்றன.
தாமரை சின்னத்தில் போட்டி
பாஜக 19 தொகுதிகளில் நேரடியாகவும், அதன் கூட்டணியில் பாமக 10 தொகுதிகளிலும், தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், ஓபிஎஸ் அணி ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சி, ஐஜேக ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகளில் தாமரை சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
பாஜக கூட்டணியில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம்
போட்டியிடுகிறார். அவர் இன்று மாலை வேலூரில் அடுத்த பெருமுகை பிள்ளையார்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திறந்தவேனில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நன்மையில் முடியும்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"பாரத பிரதமர் நரேந்திர மோடி பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வரும் ஏப்.9ஆம் தேதி வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டம் அல்லது சாலை மார்க்கமாக பொது மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்க உள்ளார்" என்று கூறினார்.
பின்னர் கச்சத்தீவு பிரச்னையை தற்போது பாஜக எழுப்பியிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஏசி சண்முகம்,"இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிதான் கட்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது. திமுக ஆட்சியில்தான் கட்சத்தீவை காங்கிரஸ் கட்சி இலங்கைக்கு கொடுத்தது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த இந்த சம்பவம் தற்போது பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார். கச்சத்தீவு பிரச்சனையை பிரதமர் சுட்டிக்காட்டியிருப்பது. இந்தியாவிற்கு நன்மையில் முடிய உள்ளது.
நமக்குதான் பிரச்னை
பாரத பிரதமர் மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பு ஏற்கும் போது, கட்சத்தீவை இந்தியாவுடன் தமிழகத்துடனும் இணைக்கும் நடவடிக்கையை பிரதமர் மோடி எடுப்பார். கொஞ்சம் காலமாக சீன அரசு இலங்கையில் நம்முடைய சக்தியை மீறி துறைமுகத்திற்கு அனுமதி வாங்கியுள்ளனர்.
இலங்கையிடம் உள்ள துறைமுகம் சீனாவிடம் சென்றுள்ளது. ஆகவே சீன நாட்டின் கப்பல்கள் அங்கு வருவதற்கு வாய்ப்பாக உள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை விட தென்னிந்திய மக்களுக்கு மிகவும் பாதிப்பாக இருக்கும். போர் என்று சொன்னாலோ அல்லது இந்தியா சைனா முற்றுகை என்று சொன்னாலோ முதலில் பாதிக்கப்படுவது நாமாகத்தான் இருக்கும். கச்சத்தீவு பிரச்சனை எதிர்காலத்தில் விஷமாக மாறி தென்னிந்தியாவுக்கு அவர்களின் ராணுவ தளம் அமைப்பதற்கு வாய்ப்பாக அமையும். எனவே பிரதமர் மோடி இந்த பிரச்சனையில் நல்ல முடிவை எடுப்பார்" என்றார்.
வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு,"மத்திய நிதி அமைச்சர்
5,000 கோடி ரூபாய் நிதி தமிழகத்திற்கு வழங்கி இருக்கிறதாகவும், அதற்கு முதலில் கணக்கு தெரிவியுங்கள் என்று கூறியுள்ளாரே" என்று ஏசி சண்முகம் பதிலளித்தார்.
மேலும் படிக்க | ’மகனுக்கு சீட் இல்லை’ சபாநாயகர் அப்பாவு திமுக தலைமை மீது அதிருப்தியா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ