நடிகர் விஜய் தவெக கட்சியை அறிவித்து, அரசியலில் என்றி கொடுக்க துவங்கிய நாள் முதல், நாம் தமிழர் கட்சி, தமிழகத்தில் ஆட்டம் காண துவங்கி உள்ளது. அந்த வகையில், பல மாவட்டங்களில் பொறுப்பில் இருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், அடுத்தடுத்து விலகி, பிற கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், உண்மையான தமிழ் தேசியம் இல்லை என்றும், அவர் தற்போது தடம் மாறுவதால், அக்கட்சியில் இருந்து பயணிக்க விருப்பம் இல்லை எனக் கூறி, நாகையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கட்சியை விட்டு விலகி உள்ளனர். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மற்றும் நீக்கப்பட்ட நாகை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது கூறிய அவர்கள், நீண்ட காலமாக கட்சிக்கு உழைத்தவர்கள் பலரையும், காரணமின்றி கட்சியில் இருந்து சீமான் வெளியேற்றி வருகிறார் என்றும், தன்னிச்சையாக தங்களின் நலனை மற்றும் பார்ப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு இனி தமிழகத்தில் இறங்கு முகம் தான் என ஆவேசத்துடன் கூறினர். நாகை மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் அப்பு என்கிற அகஸ்டின் அற்புதராஜ், நிதி முறைகேடு செய்வதாக மாநில நிர்வாகியான மணிசெந்திலிடம் தாங்கள் புகார் கொடுத்தும், அதற்கு நடவடிக்கை இல்லை என குற்றம் சாட்டிய முன்னாள் நிர்வாகிகள், புகார் அளித்த ஆத்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் அப்பு, முத்துக்குமரன் என்பவரை தூண்டிவிட்டு, தலைமை பேச்சாளர் காளியம்மாள், நாகை சட்டமன்ற தொகுதி தலைவர் அகமது, பொருளாளர் நாகராஜ் ஆகியோர் மீது, ஃபேக் ஐடி மூலம் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி கட்சியில் உள்ளடி வேலை பார்த்துள்ளனர் என காவல்துறை மூலம் பெறப்பட்ட ஆதாரத்தை செய்தியாளர்கள் மத்தியில் காண்பித்தனர்.
மேலும் சென்ற தேர்தலில் கட்சிக்காக அயல்நாடுகளில் இருந்து வந்த நிதிக்கு உரிய கணக்கு வழக்குகள் இல்லை என பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள், சீமானிடம் தற்போது உண்மைத்தன்மை இல்லை என்றும் மாவட்டத்தில் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்டு சுட்டிக் காட்டுபவர்கள் மீது அவதூறு பரப்பி கட்சியை விட்டு நீக்குவது தான் அவர் வேலை என்றும், அதனால் அவர் டிராக் மாறுகிறார் என்றும் குறை கூறினர். இனி நாம் தமிழர் கட்சியில் பயணிக்க தங்களைப் போன்றோருக்கு விருப்பமில்லை என்பதால், அக்கட்சியை விட்டு நாகை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞர் பாசறை, இணையதள பாசறை, மீனவர் பாசறை உள்ளிட்ட தொகுதி நிர்வாகிகள் விலகுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் நாம் தமிழர் கட்சியை விட்டு நாகையில் நிர்வாகிகள் விலகியது குறித்து, சீமானுக்காக வரிந்து கட்டிக்கொண்டு சாட்டை முருகன் சமூக வலைதளங்களில் சேட்டை செய்தால், கட்சியின் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு எதிர்வினை ஆற்றுவோம் என்றும் அவர்கள் ஆவேசத்துடன் கூறியுள்ளனர். நாகையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து தொண்டர்கள் கொத்தாக விலகி வந்த நிலையில், தற்போது மீண்டும் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் அக்கட்சியில் தமிழ் தேசியமும் இல்லை, ஜனநாயகமும் இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வெளியேறி வருவது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகி வருகிறது.
மேலும் படிக்க - விலகும் சமாஜ்வாதி... அதிர்ச்சியில் எதிர்க்கட்சி கூட்டணி - காரணம் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ