காவிரி பாசன மாவட்டங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை -ராமதாஸ் அறிக்கை

காவிரி பாசன மாவட்டங்களில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Last Updated : Jan 22, 2018, 04:32 PM IST
காவிரி பாசன மாவட்டங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை -ராமதாஸ் அறிக்கை  title=

காவிரி பாசன மாவட்டங்களில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

உணவு படைக்கும் கடவுள்களான உழவர்களை வாழ விடக்கூடாது என்பதில் தமிழக ஆட்சியாளர்கள் உறுதியாக உள்ளனர் என்பதை உணர முடிகிறது. சம்பா சாகுபடி செய்ய காவிரியில் போதிய தண்ணீரைப் பெற்றுத் தர முடியாத ஆட்சியாளர்கள், பல்வேறு தடைகளைத் தாண்டி காவிரி பாசனப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்துள்ள சம்பா நெல்லை கொள்முதல் செய்ய முன்வராதது கண்டிக்கத்தக்கது ஆகும்.

காவிரி பாசன மாவட்டங்களில் 10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரி ஆற்று நீரை நம்பி சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் இப்போது தான் கதிர் முற்றத் தொடங்கியுள்ளன. அவை அறுவடை பருவத்தை எட்ட இன்னும் 10 நாட்களுக்கு தண்ணீர் தேவை. ஆனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 48.50 அடியாக குறைந்து விட்டது. அணையின் நீர் இருப்பு 16.81 டி.எம்.சியாக சரிந்து விட்டது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் வினாடிக்கு 81 கன அடியாக குறைந்து விட்டது. 

இதனால் அணையிலிருந்து திறந்துவிடப் படும் தண்ணீரின் அளவும் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என்ற அளவிலிருந்து 8,000 கன அடியாக குறைக்கப்பட்டு விட்டது. கடைமடை பாசனப் பகுதிகளின் சம்பா பயிர்த் தேவைக்கு இந்த தண்ணீர் போதுமனதல்ல. ஆனால், இந்த அளவு நீரே எவ்வளவு காலத்திற்கு திறக்கப்படும் என்பது தெரியவில்லை.

மேட்டூர் அணையில் குறைந்தபட்சமாக 16.27 டி.எம்.சி. தண்ணீர் பராமரிக்கப்பட வேண்டும். இப்போது அணையிலிருந்து வினாடிக்கு 8,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதால், அணையின் நீர் இருப்பு தினமும் 0.66 டி.எம்.சி வீதம் குறையும். அதன்படி பார்த்தால் நாளை காலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 16.15 டி.எம்.சியாக குறைந்து விடும். 

இது குறைந்தபட்ச நீர் இருப்பு அளவை விட குறைவு என்பதால் தண்ணீர் திறப்பை இன்றிரவுடன் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டால், காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில் பெரும்பகுதி கருகுவதை தவிர்க்க முடியாது. இது காவிரி பாசனப்பகுதி உழவர்களை மீளாக்கடனில் ஆழ்த்தி விடும்.

காவிரி பாசன மாவட்டங்களுக்கு இன்னும் 10 நாட்களுக்கு, அதாவது பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி வரை வினாடிக்கு 10,000 கன அடி வீதம் திறக்க 8.30 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். மேட்டூர் அணையில் அதைவிட இரு மடங்கு தண்ணீர் உள்ள நிலையில், குறைந்தபட்ச நீர் இருப்பு விதிகளை தளர்த்தி அடுத்த 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும். இதனால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. 

கர்நாடக அணைகளில் தேவைக்கு அதிகமாக தண்ணீர் இருக்கும் நிலையில், அங்கிருந்து சம்பா பாசனத்திற்கு தண்ணீர் பெற்றுத்தர கையாலாகாத தமிழக ஆட்சியாளர்களால் முடியாத நிலையில், சம்பா பயிர்களைக் காப்பாற்ற இதைத் தவிர வேறு வழியில்லை. இதற்கு முன் கடந்த 2013-ஆம் ஆண்டில் சம்பா பயிரைக் காப்பாற்ற மேட்டூர் அணையின் நீர் இருப்பு 2 டி.எம்.சியாக குறையும் வரை தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல், இப்போது தண்ணீர் திறக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இது ஒருபுறமிருக்க நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடி நடைபெற்ற மோட்டார் பாசனப் பகுதிகளில் அறுவடைத் தொடங்கியிருக்கிறது. ஆனால், சம்பா நெல்லை கொள்முதல் செய்ய போதுமான அளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. 

மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் பட்சத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் 10 முதல் 12 லட்சம் டன் அளவுக்கு நெல் கொள்முதல் செய்ய முடியும். தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் இதுவரை 3 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவற்றைக் கொள்முதல் செய்ய இதுவரை 100-க்கும் குறைவான நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.

இதைப்படிப்படியாக 500 கொள்முதல் நிலையங்கள் என்ற அளவுக்கு திறக்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்பட்டாலும் கூட அவை போதுமானதாக இருக்காது. போதிய அளவில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாவிட்டால், விவசாயிகள் நெல்லை அடிமாட்டு விலைக்கு தனியாரிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். 

இதைத் தடுக்க காவிரி, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உழவர் சங்கத் தலைவர்களுடன் பேச்சு நடத்தி குறைந்தபட்சம் 900 முதல் 1000 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை இம்மாத இறுதிக்குள் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News