Chennai: சென்னையில் இருந்து விமானத்தில், சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற, ரூ.20 லட்சம் ரூபாயை சென்னை விமான நிலையத்தில், பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து, சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். பெண் பயணியின் சூட்கேஸ் ரகசிய அறைக்குள் மறைத்து வைத்திருந்த, 500 ரூபாய் நோட்டு கட்டுகளை, சோதனையில் கண்டுபிடித்து, பறிமுதல் செய்த அதிகாரிகள், பெண் பயணியை கைது செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு சிங்கப்பூருக்கு புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளை, பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து, பயணிகளை விமானத்திற்கு அனுப்பி கொண்டு இருந்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த சுமார் 32 வயது பெண் பயணி ஒருவர் சுற்றுலா பயணியாக, இந்த விமானத்தில் சிங்கப்பூருக்கு செல்வதற்காக வந்தார். பாதுகாப்பு அதிகாரிகள், அவருடைய சூட்கேஸை ஸ்கேன் மூலம் பரிசோதித்தனர். அந்த சூட்கேசில் ரகசிய அறைக்குள் இந்திய பணம், 500 ரூபாய் நோட்டு கட்டுகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், பெண் பயணியின் சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்தனர். அதோடு சூட்கேஸைத் திறந்து, ரகசிய அறையில் மறைத்து வைத்திருந்த,500 ரூபாய் நோட்டு கட்டுகளை எடுத்து எண்ணத் தொடங்கினார். மொத்தம் 40 கட்டுகளில், ரூ.20 லட்சம் இந்திய பணம் இருந்தது.
மேலும் படிக்க | ஜெயலலிதா இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவரா...? அண்ணாமலை சர்ச்சைக்கு ஜெயகுமார் தடலாடி
இதை அடுத்து பணத்தை பறிமுதல் செய்த பாதுகாப்பு அதிகாரிகள், பெண் பயணியிடம் விசாரித்தனர். அப்போது அந்த பெண் பயணி, இந்த பணத்தை சிங்கப்பூருக்கு எடுத்து செல்லும்படி, வேறு ஒருவர் என்னிடம் கொடுத்தார். அதோடு பணத்தை சிங்கப்பூரில், குறிப்பிட்ட ஒரு நபரிடம் கொடுத்து விட்டால், எனக்கு ரூ.10 ஆயிரம் பணம் தருவதாக கூறினார். பணத்துக்கு ஆசைப்பட்டு நான் இந்த பணத்தை எடுத்துச் செல்கிறேன் என்று கூறினார்.
இதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் கடத்தல் பெண் பயணியையும், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 20 லட்சம் இந்திய பணத்தையும், சென்னை விமான நிலையத்தில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, கடத்தல் பெண் பயணியை கைது செய்தனர். அதோடு இவரிடம் இந்த 20 லட்சம் ரூபாயை கொடுத்து அனுப்பிய ஆசாமி யார்? என்றும் விசாரணை நடத்துகின்றனர். அதோடு மேல்விசாரணைக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு பெண் பயணியை அழைத்து சென்றுள்ளனர்.
இதைப்போல் வெளிநாட்டிற்கு பணத்தைக் கடத்துபவர்கள், இந்திய பணத்தை வெளிநாட்டு பணமாக மாற்றி, அதன் பின்பு தான் கொண்டு செல்வார்கள். ஆனால் இந்தப் பெண் இந்திய பணமாகவே எடுத்துச் சென்றது, பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் வழக்கமாக இதைப்போல் பறிமுதல் செய்யப்படும் பணத்தையும் கடத்தல் பயணியையும் பாதுகாப்பு அதிகாரிகள், சுங்கத்துறையிடம் ஒப்படைப்பார்கள். ஆனால் இப்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமுலில் இருப்பதால், அதிலும் கைப்பற்றப்பட்ட பணம் இந்திய பணம் என்பதால், பாதுகாப்பு அதிகாரிகள் வருமான வரித்துறை இடம் ஒப்படைத்தனர் என்று கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ