ஆணவப் போக்கு கட்சித் தலைவருக்கு அழகல்ல: அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

இந்த ஆணவப் போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. மேலும் தனது அவதூறான பேச்சை இதுதான் தர்மம் என நியாயப்படுத்தும் பேச்சு இன்னும் கொடுமை: சென்னை பத்திரிகையாளர் மன்றம் 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 28, 2022, 09:13 AM IST
  • பாஜக மாநிலத்தலைவர் திரு. அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்.
  • சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக இது குறித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த ஆணவப் போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல: சென்னை பத்திரிகையாளர் மன்றம்.
ஆணவப் போக்கு கட்சித் தலைவருக்கு அழகல்ல: அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்  title=

ஊடகங்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் பாஜக மாநிலத்தலைவர் திரு. அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நாவடக்கம் அவசியமானது என அவருக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக இது குறித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

‘27-05-2022 மாலை சென்னையில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறார் பாஜக தமிழ்நாடு தலைவர் திரு.அண்ணாமலை. ஊடகவியலாளர் ஒருவரின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தன் நிதானத்தை இழந்த அண்ணாமலை அவர்கள், கேள்வி கேட்டவரைப் பார்த்து அறிவாலயத்தில் இருந்து 200 ரூபாய் கிடைத்துவிடும் என்று ஆரம்பித்து திடீர் ஏலதாரராய் மாறிப் போய்க் கொண்டே 3000 ரூபாய் என்று அவதூறான  வகையில் பேசியிருக்கிறார். 

ஊடகவியலாளர் கேள்வியை எதிர்கொள்ள முடியாவிட்டால் அமைதி காக்கலாம். மாறாக ஊடகவியலாளர்கள், தங்களுடைய கடமைகளை செய்ய அறிவாலயத்தில் கையூட்டு பெறுகிறார்கள் என்று அவலமான அவதூறு செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த ஆணவப் போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. மேலும் தனது அவதூறான பேச்சை இதுதான் தர்மம் என நியாயப்படுத்தும் பேச்சு இன்னும் கொடுமை.

இது போன்ற பேச்சுக்களை திரு. அண்ணாமலை தொடர்ந்து பேசி வருவது ஊடகங்களின் உரிமையை உணர்வுகளை உரசிப்பார்க்கும் போக்கு. இந்த போக்கை கைவிட்டு நாவடக்கத்துடன் நயத்தகு நாகரீக அரசியலை அண்ணாமலை கற்றுக் கொள்ள வேண்டும்.

 யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு என்ற திருக்குறளை தமிழக பாஜக தலைவர் தொடர்ந்து படிக்கவும் வலியுறுத்துகிறோம். தர்மத்தை உணர திருக்குறள் துணை நிற்கும்.’ என்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச்செயலர் பாரதிதமிழன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | தமிழ்நாட்டு மக்களுக்கு நேற்றைய தினம் சரித்திர நாள்: அண்ணாமலை

முன்னதாக நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, ‘நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் தமிழ் கலாச்சாரத்தை நேசிக்கும் வகையில் மண்ணை நேசிக்கும் வகையில் பேசினார். ஆனால் முதலமைச்சர் பேசியது திமுக தலைவர் தொண்டர்களிடம் பேசியது போல் இருந்தது. 

இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பள்ளி மாணவர்களின் கற்றல் அடைவுத்திறன் குறைவாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தொடர்ந்து கல்வியை அழித்ததற்கு பட்டம் தர வேண்டுமென்றால் அதை திமுகவுக்குத் தான் தர வேண்டும். 

நீட் என்ற பொம்மையை வைத்து டிராமா போடுகிறார் ஸ்டாலின். கும்மிடிப்பூண்டி முதல் கோபாலபுரம் வரை தான் ஸ்டாலினின் அரசியல். இந்தியா முதல் உலகம் வரை மோடியின் அரசியல். மோடிக்கு அனைத்தும் தெரியும். சிறுபிள்ளை போல் பேசாமல் சரியான முறையில் ஆக்கப்பூர்வமான முறையில் ஸ்டாலின் செயல்பட வேண்டும்' என்று கூறினார்.

தொடர்ந்து அண்ணாமலையிடம் பேனர் விதிமீறல் பற்றி கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், நேற்று நடந்த நிகழ்ச்சியில் பாஜக சார்பில் வைக்கப்பட்ட பேனர் ஒரு சில இடத்தில் விழுந்ததாக குறிப்பாக பேனர் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்துள்ளது என்று பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு தாங்கள் செய்த அனைத்து ஏற்பாட்டிற்கும் காவல்துறையிடம் அனுமதி பெற்றே அனைத்தையும் செய்தோம் என்று கூறிய அண்ணாமலை, தொடர்ந்து பத்திரிக்கையாளர் போட்டி போட்டுக்கொண்டு கேள்வி கேட்டதால் ‘அண்ணா உங்களுக்கு 200 உண்டு என்று கூறிய நிலையில் தொடர்ந்து பத்திரிக்கையாளர் கேட்டுக்கொண்டே இருந்ததால் வாக்குவாதம் செய்வது போல் 400 600 2000 கடைசியாக 3000  ரூபாய் கண்டிப்பாக உண்டு, திமுக விடம் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார். 

மேலும் படிக்க | அரைவேக்காடு அண்ணாமலை - கே.பாலகிருஷ்ணன் கண்டனம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News